பக்கம்:காதலா கடமையா.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தனைக்கொன்று வாழ நினைக்கும் தீயேன்,
ஒருவாளொடு நிற்கையில் உறக்கத் திரைக்குள்
இருவாள் விழியையும் இட்டு வைத்தாள்.
கலைக்கழகு நல்குதிருக் கண்ணமுதை மாய்க்கக்
கொலைக்க ருவிநான் கொண்டதை அறியாள்.
இன்பக் கனவுலகு தனில்வாழ்ந் தாளோ
துன்பம் நெருங்குவது தோன்றா திருந்ததோ,
பொன்னுடலில் எங்குப் புகுத்துவேன் வாளை,
மென்மை உடலை வெட்டிச் சிதைப்பதோ
ஐயோ. நானோ? அவளையோ அன்பு
பொய்யோ” என்று புலன்கள் கலங்கும்
போதில் நெடுவாள் பொத்தென்று வீழ்ந்தது!
காததிர்ந்து கிள்ளை கண்ணை விழித்தாள்.
“நீவிரோ! நீவிரோ! நீந்தத் தெரியாது.
தீவின் நடுவில் திகைத்துத் துயர்க்கடல்
பாய்ந்தழி வேனுக்குப் பாய்விரித்துக் கப்பல்
வாய்ந்த தெனவே வந்தீர் வருக!
நீவிரோ” என்று நிகழ்த்தி, மகிணனின்
பூவிழியில் சொட்டும் புனலொடுவாளைக்
கண்டாள் முகத்தில் களையிழந்து நிற்றலைக்
கண்டாள். நடுங்கும் கைகள் கண்டாள்.
“என்ன என்ன என்ன” என்றாள்.
“கொன்றை விடுதலை கொள்ள வேண்டும்.
உரிமை இழந்தும் உடலைச் சுமந்து
திரிவார்க்கு விடுதலைச் சிறப்பை இதுவென்று
காட்டுதல் வேண்டும். காதலைப் பார்க்கிலும்
நாட்டுக் கடமையே நனிபெரி தென்று
குறிக்க வேண்டும். கொல்லவந் தேன்உனை.

103

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/104&oldid=1484384" இலிருந்து மீள்விக்கப்பட்டது