பக்கம்:காதலா கடமையா.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காதலா? கடமையா?

பாதியைக் காதலுக்குப் பறிகொடுத்தான்.
ஏதிலார் கேட்பினும் இரங்கும் குரலில்
“அன்பை என்பால் ஆக்கிய பிழையால்
என்பும் தோலும் இணைந்தஇவ் வுடலைப்
பின்நாள் நோய்வந்து பிளக்கும் கட்டையை
இந்நாள் தீர்க்க இரங்கி நின்றீர்"
என்று கூறி எடுத்தடி வைத்து
நின்றோன்கை நெடுவாளை நெருங்கித் தொடுவாளைத்
தொட்டு மலர்மெய்ச் சுனைமூழ்கி "என்றன்
கட்டிக் கரும்பே விட்டுப்போ வாயோ"
என்று நெஞ்சம் இளகிக் கிடந்தான்.
"கொன்றை விடுதலைக்குக் கொடுப்பீர் என்னை,
என்றன் கற்பை எளிதாய் நினைப்போன்
நன்று திருத்த நல்குவீர் என்னுயிர்"
என்று வாளைத் தன்கையில் மீட்டு
நின்றாளை, "அன்பே" என்று கெஞ்சி
வாள்பிடித்தான், அவன் தாள்பிடித்தே அவள்,
"சிறிது மறைவில் சென்றிருங்கள்.
குறை தவிர்ப்பேன் கொன்றையை மீட்பேன்"
என்ன உரைத்தும் ஏகா திருந்தான்.
பின்னே நாலடி பெயர்த்து வைத்து
வாளைத்தூக்கினாள் வளைகழுத் துநேரில்.
ஆள்வந்து பின்புறம் வாளைப் பிடித்து,
"விடுதலை பெற்றது நெடிய கொன்றை.
விடுக அன்னையே, விடுக வாளை"
என்ற குரல் கேட்டுத் தன்முகம் திரும்பினாள்
நின்ற அமைச்சன், "மன்னன் நானே
என்னுரு மாற்றி இங்குவந்தேன்

 

105

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/106&oldid=1483641" இலிருந்து மீள்விக்கப்பட்டது