பக்கம்:காதலா கடமையா.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதலா? கடமையா?

தூய்கழுத்து வெட்டத் தூக்கினாள் கத்தியைப்
பின்னே ஓடிப் பெருவாள் பற்றினேன்.
என்னே நாட்டில் இவர்க்குள அன்பு!
கடமையின் இலக்கணம் கண்டேன்! கண்டேன்!
சுவையுறு வாழ்வின் தூய இலக்கியம்
இவைகள் கண்டேன்! யானோ தந்தேன்?
விடுதலை தந்தவன் வேந்தன் நாலோ?
விடுதலை உள்ளமே விடுதலை விளைக்கும்”
என்றான் மன்னன். இதனைக் கேட்கையில்
அழுதார் மக்கள். அழுதுகொண்டே
தொழுதார் மகிணனைத்! தோகை கிள்ளையைத்!
தங்கவேலின் சாக்காடு கேட்டே
“எங்களுக் காக எங்களுக் காக”
என்று நெஞ்சம் இரங்கி அழுதார்.
மன்னன் கூறினான் பின்னும், “மக்களே,
இந்நிலம் துன்பமும் இன்பமும் கலந்தது!
மனிதன் உள்ளமும் மறம், அறம் கலந்ததே.
இனிது செய்பவன் இன்னாது செய்வதும்
இன்னா செய்பவன் இனியவை நாடலும்
உண்டெனல் நானே கண்டேன் என்னிடம்!
இன்று நானும், என்பெரும் மறவரும்
கொன்றை நாட்டினின்று செல்வோம்.
வாட்பொறை யுள்ளான் மாப்பே ரறிஞன்.
தாரோன் உள்ளான் தகுதி யுள்ளான்.
மகிணனும் கிள்ளையும் மற்றும் பலரும்
இருக்கின்றார்கள் இவர்கள் கொன்றைக்குப்
பொருத்த மான புதுமுறை வகுப்பர்.
நல்லதோர் ஆட்சியில் எல்லீரு மாக
மல்குசீரொடு வாழிய" என்றான்.
மக்கள் மீண்டும் மன்னனை
மிக்க அன்பினால் வாழ்த்தினர் நன்றே.

110

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/111&oldid=1483510" இலிருந்து மீள்விக்கப்பட்டது