பக்கம்:காதலா கடமையா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயம்புதல் என்னெனில்,
ஐந்துநாட் பின்னை நாம் அங்கு வருவோம்
வந்து விடுதலை வழங்குவோம் நன்றே.”

என்றது கேட்டு,
மறவர் மகிழ்ந்தனர்; மலைத்தோள் விம்மினர்.
“இறைவனை வாழ்த்துவோம்” என்றனர் சில்லோர்.
“நாட்டுக் குழைத்தோம் நற்பயன் கண்டோம்
ஆட்பட்டோம் எனும் அல்லல் இல்லை”
என்றான் ஒருவன். 'எழுந்து விழுந்து
சிரித்தான் ஒருவன். செங்கை கொட்டி ஆர்ப்
பரித்தான் ஒருவன். பாடினான் ஒருவன்.
அவர்களில் ஒருத்தி அறிஞன் எழுதிய
ஒவியம் போன்றாள்; ஒன்றும் உரையாமல்
ஆவிநேர் தலைவன் அறைவது கேட்கும்
விருப்பால் சும்மா இருப்பா ளாயினாள்.

தலைவன் சாற்றினான்:
“தோழமை உள்ளீர் தோழமை உள்ளீர்;
மாழை நாட்டின் மாப்பே ரரசன்
உரிமை தருவதாய் உரைத்தான்;
தருவதோர் பொருளோ உரிமை?
தருவதோர் பொருளெனில், மீண்டும்
பறிப்பதோர் பருப்பொருள் அதுவே யன்றோ.
வென்ற தோளோடு, மீண்டும்நம் தோள்எனும்
குன்று, சாடிய குருதி தோய்ந்த
வெற்றி நிலத்தில் விளைவ தாம் விடுதலை.
மற்றது கெடுதலை மறவர் மாட்சிக்கே.”
இது கேட்டுக் கிள்ளை என்னும் அவ்
அழகியோள் “ஆம் ஆம்” என்றாள்.

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/18&oldid=1484378" இலிருந்து மீள்விக்கப்பட்டது