பக்கம்:காதலா கடமையா.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"ஏசினேன் தோழி யான்உனை,
மறந்துவிடு.
பிறந்தோர் எல்லாம் பிழைசெயல் உண்டு.

பொய்கைதன் நீரால் புன்செய் காத்தல்போல்
ஐயன் உள்ளத் தன்பெலாம் நாட்டுக்
காக்கினான் தோழி, ஆம் ஆம். ஆயினும்
என் செய்வேன்?
உன்னை ஒன்று கேட்பேன்:
நினைவும், தொண்டும் நிழலும் உடலுமாய்ப்
பிழையாது பிறழாது பெருநாடு காப்பவன்
ஆயினும் ஆகுக.

மோப்பதும் பார்ப்பதும் முடுகலும் குட்டியைக்
காப்பதற் கென்னும் கருவரிப் பூனைபோல்
கொன்றை நாட்டின் குடிகட் கென்றே
என்றும் உழைப்பான் இம்மியும் தாழான்
ஆயினும் ஆகுக.

கைவிரைந் தில்லம் காப்பவள், தெருவில்
ஐயம் என்றால் அளிக்க அணுகல் போல்,
என்நிலைக் கிரங்கி என்பாற்
சிறிது பொழுது, சிறிது பேசி
நிறைய என் நெஞ்சில் நறவு பெய்து
போனால் என்ன? புகல்வாய்" என்றாள்.

"உன்னவரும் முகத்தில் ஒளியும் குறைந்ததே"
என்றாள் தோழி.

"திங்கள் ஒளிபெறல் செழுங்கதிர் வரவால்"
என்றாள் கிள்ளை.

அதே நேரம்,
கள்ளிருந்த மொழியாளின், அன்னை
உள்ளிருந் தழைக்க, ஓடினாள் பறந்தே.

22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/23&oldid=1484394" இலிருந்து மீள்விக்கப்பட்டது