பக்கம்:காதலா கடமையா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணியுடை மணியிழை மக்கள் அணிந்தே
அணிபெறத் தெரு அனைத்தும் நின்றனர்.
வீட்டு வாயிலில் வேந்தன் வரவெண்ணிக்
காட்டி மறைவன காதல்மின் னார்முகம்.

தெருவில் அமைந்த திருமன்று தோறும்
உருவில் அமைந்த ஒண்டோடி மாதர்
ஆடினர்; பாடினர்.
நீடிசைக் கருவிகள் நிறைத்தன அமுது.
முரசம் அதிர்ந்தன.

“அரசன் வந்தான், அரசன் வந்தான்"
என்றசொல் கடலென இரைதல் ஆனது.

தேன்நிறை மலர்க்காடு செலும்வண் டுகள்போல்
யானை வரும்வழி ஏகின விழிகள்.

எள்ளும் விழாவணம் இருந்த கூட்டத்தில்
குள்ளன் ஒருவன் குதித்துக் குதித்து
மன்னன் ஆங்கே வருவது பார்த்தான்.
கமழ்பொடி இறைத்தன கைகள்; வாயெலாம்
தமிழ் மலர்ந்தது “தமிழகம் வாழ்” கென.

நிரல்பட நின்ற நெடுங்குன் றங்கள்
வரல்என வந்தது மாக்கா லாட்படை;
காலடி போல்இசைக் கருவிகள் முழங்கின.
சாலடி நீலத் தலைப்பா கையினர்,
வாளொடு சுமந்து வருங்குதி ரைப்படை
தாளத் திற்குத் தாள்ஒத்து வந்தது.

24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/25&oldid=1484428" இலிருந்து மீள்விக்கப்பட்டது