பக்கம்:காதலா கடமையா.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொன்றையை வெற்றி கொண்ட ஏந்தலே!
நன்றுநும் செங்கோல், நாளும் வாழிய!
பன்னா ளாக இந்நாட்டு மக்கள்
நன்னிலை நோக்கி நடப்பார் ஆயினர்;
செந்தமிழ் என்னும் தேனாறு பாயாத
உள்ளம் ஒன்றும் இல்லை.
கல்வியைக் கண்ணும் கருத்துமாய்க் கற்றனர்.

அதனால்,
இந்நாட்டில் பிறரால் இறக்குமதி பெற்ற
சாதி, நினைப்பிலும் தங்கா தகன்றது.
பெண்கள் விடுதலை பெற்றனர்.
கைம்மை இல்லை.
சமயப் பிணக்கெனும் சழக்கும் இல்லை.
ஆனால்,
அன்புடை அரசே,
நிலத்தின் வருவாய் நிறைய உண்டெனினும்
உலைக்கரிசி மக்கள் உணவுக்குப் போதா.
பாலின் நுரைநிகர் பருத்திஉண் டெனினும்,
மேலுக்கோர் கந்தை மிஞ்ச வில்லை,
தேக்கும் பனையும் தென்னையும் இருக்கையில்,
மூக்குமுனை தரையில் முட்டக் குனிந்து
புகும் குடிசைகள் நகும்படி உள்ளன.

ஆதலின்,
பிணிகள் பெருகின.
மன்ன! நின் பேரால் கொன்றை நாட்டில்
நன்முறை ஆட்சி நடத்தும் ஒள்ளியோன்
இந்நிலை உம்பால் இயம்பிய தாலே
விடுதலை அருள விரும்பினீர்;
கெடுதலை நீக்கிடக் கேட்டோம் யாமுமே!

27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/28&oldid=1484628" இலிருந்து மீள்விக்கப்பட்டது