பக்கம்:காதலா கடமையா.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொன்னுடை, மணி இழை, புதுச்சுவைப் பண்டம்
இவற்றால் நான்மிக இன்பம் பெற்றதாய்
நவின்றாள். பின்னர் நான் அரசு பெற்றே
இந்நிலம் வாழ்த்த இருக்கையில் நான்மிக
நன்நிலை உற்றதாய் நவின்றனர். பகைவரை
வென்ற போதில் என் வெற்றியை வியந்தனர்.

அன்றுநான் மணந்த அழகிலா ஒருத்தியால்
இன்பம் பெற்றதாய் எண்ணினேன். இதுவரை
துன்பம் உற்றேன்இத் தோகையைப் பெறாததால்,
நெஞ்சு நெருப்பாயிற்று நேரில் கண்டதும்;
வஞ்சி எனக்கெனில் வாழ்வெனக் குண்டு;
மணமா காத மங்கை : மண்ணில்நான்
பிணமாகு முன்பு பெறத்தக்க பேறு!
சற்றுமுன் என்கண் பெற்றது கேட்பாய்,
சும்மா, கைப்புறம் தோழி தொட்டாள்,

அம்மங்கை,
செம்மாதுளை உடைந்ததெனச் செவ்விதழ் மின்னிக்
கொடிமுல் லையெனக் குலுங்கச் சிரித்தாள்.
வைய விளக்கை, என் வாழ்வின் பத்தைநான்
கையோடு கொண்டுபோய் உய்யு மாறு
“செய்க அமைச்சனே!” என்று செப்பினான்.

அப்போது,
மன்றினை நோக்கி மக்கள் மொய்த்தனர்
இன்றுதான் விடுதலை என்று கூவினர்.
மாடியில் இருந்த மன்னன் உணர்ந்தான்.
ஓடி அங்கே உள்ளவரிடத்தில்,
“நாளை விடுதலை நல்குவேன்” இதனைக்
கூறுக என்று கோமான் கூறினான்.
அதனை அமைச்சன் கூற
புதுமை இதுஎன்று போயினர் மக்களே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/35&oldid=1484271" இலிருந்து மீள்விக்கப்பட்டது