பக்கம்:காதலா கடமையா.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“கிள்ளையை அன்றோ கேட்டல் வேண்டும்?
கிள்ளையின்,
உள்ளம் பறித்தவன் ஒருவன் உள்ளான்
அவனும் அவள்பால் அன்புளான் போலும்”
என்னலும்,
“வாட்பொறை, வாட்பொறை, கேட்பாய், கேட்பாய்.
ஆட்பட்ட நாட்டை மீட்டல் வேண்டும்நீ!
இணங்கா ளாயின் எத்தீங்கு நேருமோ!
மணந்திடச் சொல்க! வஞ்சி இதனை
மறுப்பது விடுதலை மறுப்ப தாகும்.
அதனால்
கொன்றை நாட்டினர் கொடுமை ஏற்பார்.
என்றும் உன்னையும் இளையாள் தன்னையும்
தூற்றுவ ரன்றோ? சொல்க அவட்கிதை”
என்றான் ஒள்ளியோன்.

நாளை விடுதலை ஏடு நல்குதல் உண்டோ”
என்று கேட்டான் எழிலுறும் வாட்பொறை.

“இன்று கிள்ளை இணங்குதல் உண்டோ”
என்றான் ஒள்ளியோன்.

“ஐயகோ மக்கள் அவாவும் விடுதலை
எய்தல் வேண்டுமே” என்றான் வாட்பொறை!

“என்றன் நாட்டுப் படையும் யானும்
கொன்றை நாட்டினின்று நீங்கிட,
அரசனோடு கிள்ளையை அனுப்புக, அனுப்புக
விரைக” என்று விளம்பினான் ஒள்ளியோன்.
சாவுபடு முகத்தொடு வாட்பொறை
ஆவன செய்வதாய் அறைந்து சென்றானே.

36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/37&oldid=1484434" இலிருந்து மீள்விக்கப்பட்டது