பக்கம்:காதலா கடமையா.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதலா? கடமையா?

முயலுதல் வேண்டும். மொய்குழல் தன்னினும்
அயலவர் பல்கலை ஆய்ந்தார் அல்லர்.
மேலும், பெண்கட்கு விடுதலை தருவதாய்
ஏலு மட்டும் இயம்பி வந்தோம்.
அதற்கடை யாளம் அமைத்தல் வேண்டும்.
இது என் எண்ணம்” என்றான் தங்கவேல்.

“ஓர்உளம் பெருநாட்டை ஓம்புதல் ஒண்ணுமோ?
சீருளம் ஒருநாள் தீயுளம் ஆகும்
ஆதலால்,
பல்லார் கூடி நல்லன நாடி
அல்லலை நீக்கும் ஆட்சியே ஆட்சியாம்”
என்று மகிணன் இசைக்கத், தங்கவேல்,

“பல்லார் கூடிப் பாங்குற அமைத்த
நல்லதோர் முடிவை நடத்து தற்கும்
மேல்ஒரு தலைவன் வேண்டு மன்றோ?
சேலினை நிகர்விழித் தெரிவையைத் ‘தலைவி’
ஆக்குதல் நன்றே அன்றோ” என்றான்.

“ஆக்குவோர் நீ, நான் அல்லோம், நாட்டினர்
அனைவர் ஒப்பமும் அதற்கு வேண்டும்.
இனிநாம் கூடிச் சட்டம் இயற்றுவோம்”
என்று மகிணன் கூற
“நன்”றெனத் தங்கவேல் நடந்தான் ஆங்கே.

38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/39&oldid=1484451" இலிருந்து மீள்விக்கப்பட்டது