பக்கம்:காதலா கடமையா.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காலே அரைக்கால் காணி அளவில்
விளையா நிலத்தை வித்தி, அறுத்தும்
எளியார்க் கீந்தபின் எஞ்சிய நெல்லால்
தன்னையும் தன், உடல் தளர்மனை வியையும்,
என்னையும் காக்குமோர் ஏழை உழவனின்
மைந்தன் நான்:

ஒருநாள் களத்தில் ஒட்டிய நெல்லைத்
தருவோர்க்குத் தந்தபின் வருவாய் நோக்கினேன்.
செக்கேற்றம் இறைத்தவன் வைக்கோலைக் கூலியாய்க்
கைக்கொண்ட தால்வெறுங் கையோடு நின்றேன்.
நின்றஎன் அண்டையில் நீர்தேங்கி நின்றதால்
என்றன் உடல்நிழல் யான்அதில் கண்டேன்.
கற்பாறை போலக் கண்டேன் என் தோளை,
நிற்கும் என்னுடலை நெடுநாள் ஓம்பிய
ஏழை யன்னையார் ஏழை அப்பர்,
கூழின்றி வாடும் கொடும்பசி யுடையார்,
அம்முதி யோர்க்கே இம்மலை யுடலதால்
இம்மியும் - பயனே இல்லை யன்றோ?
எங்கே நெல்லென எனைஅவர் கேட்டால்
இல்லை என்பதோ இருக்கும்இக் கொடியேன்
என்று வருந்தினேன்.
அன்றுதான் என்னருங் கொன்றைநாட் டன்பர்
மக்களுக் குழைக்க வா என்ற ழைத்தனர்
நான் அதைத் தந்தையார்க்கு நவின்றேன்,
தந்தையார்
கூனுடல் தாயர்பால் கூறினார்
தாயார் சாற்றினார் :
காலே அரைக்கால் காணியை விற்றும்

41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/42&oldid=1484456" இலிருந்து மீள்விக்கப்பட்டது