பக்கம்:காதலா கடமையா.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதலா? கடமையா?


பாலே றியநம் பசுவை விற்றும்,
செம்புழுக் கலரிசி சேர்த்து வாங்கித்
தும்பைப் பூவெனச் சோறு சமைத்தே
எருமை முதுகெலும்பு பருமனில் கொல்லை
முருங்கை மரத்திற் பெருங்காய் பறித்துக்
குழம்பிட்டுன் தந்தைக்குக் கும்பிட்டுப் படைப்பேன்,
தொழும்பு பட்ட நாட்டுக்குத் தொண்டுசெய்,
என்றருள் செய்தார். நன்றென்று வந்தேன்.
தந்தை யார்க்கும் தாயார் தமக்கும்
எந்த நலமும் இல்லா என்னுடல்
எழிற்பெரு மக்களை ஈன்றநாட் டுக்கு
விழிப்பொடு சிறிது வேலை செய்ததாய்
இருப்பின், இன்பம் எனக்கதைப் பார்க்கிலும்
இராது. கிள்ளை என்னை விரும்பினாள்;
என் உளம் ஐயா என்சொற் கேட்காது
தென்னையின் வரியணில் புன்னையில் பாய்தல்போல்
கொடியிடைக் கிள்ளைபால் குடி போயிற்றே.
விடுதலை விரும்பாக் கொடியன் நானோ.”
என்று பெருமூச் செறிய நின்றான்!
“இன்னல் என்ன எய்துமோ”
என் றுநல் லமைச்சன் ஏகினானே.

 

42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/43&oldid=1483584" இலிருந்து மீள்விக்கப்பட்டது