பக்கம்:காதலா கடமையா.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இவ்வுரை கேட்ட எழில் சேர் கிள்ளையின்
செவ்விதழ் துடித்தது, சேல்விழி எரிந்தது.
“மகிணனைக் கொண்டவள் மன்னனைக் கொள்வாளோ!
அகன்ற மார்பினன்; அடல்மலைத் தோளினன்;
பெருமக்கள் நலம் பேணும் ஆற்றலன்;
அருள்மிக்க விழியினன்; அன்புளான் என்பால்!
இதனை மன்னனுக் கெடுத்துரைத் தீரோ?”
என்று கிள்ளை இயம்பிய அளவில்

ஒன்று சொல்வேன் உற்றுக் கேள்என்று
வாட்பொறை சொல்வான்:
“நீ, இன்று
மன்னனை மணந்தால் வருவது விடுதலை,
மறுத்தால் வருவது கெடுதலை யாகும்.
நனிபசி கொண்ட நாட்டு மக்கள்,
கிள்ளையால் வந்தது கெடுதலை என்று
விள்ளுவார், விழிநீர் வெள்ளமாக
அழுவார். ஏழையர் அழுத கண்ணீர்
கூரிய வாள்எனக் கூறினர் பெரியோர்.
மேலும் கேட்பாய்.
மன்னனை மணப்பதால் மாட்சிகுறையாது;
மகிணனை மணந்தால் நகுவர் உறவினர்!
வயிறொட்டிய நாயும் வெயில்கண்டு கூவாது
துயில்கின்ற சேவலும் பயில்சிற் றூரில்
காட்டா மணக்கும் கள்ளியும் மறைக்குமோர்
மோட்டு வளை சுரை மூடிய குடிசையில்
அரிசி கிடைப்பின் அடுப்பு மூட்டும்நாள்
திருநா ளாகக் கருதும் எளியார்க்குக்
கந்தை சுமந்து கையாற் கசக்கி

44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/45&oldid=1484569" இலிருந்து மீள்விக்கப்பட்டது