பக்கம்:காதலா கடமையா.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊர்ப்பெரு மக்கள் ஒன்று சேர்ந்து
தீர்ப்பீர் “குறை” எனச் சென்று கூவினர்.
மாடியில் அரசன் மக்கள் குரல் கேட்டு
வாடிய முகத்தோடு வாளா இருந்தான்
ஒள்ளியோன் மாடியின் உச்சியினின்றே
வெள்ளம்போல வெளியில் இருப்பார்க்குச்

சொல்லுகின்றான்:
“கொன்றை நாட்டினரே, கூறுவது கேளீர்
மன்னன் விடுதலை வழங்கு முன்பு
இந்நாடு விடுதலைக் கேற்ற தகுதி
உடையதா என்பதை நடைமுறை தன்னில்
கடிதில் ஆராய்தல் கடமை அன்றோ?
ஆதலால்,
பொறுப்பீர் என்று புகன்றான்.” மக்கள்
நீவிர் இங்கு நெடுநாள் தங்கி
யாவும் அறிந்துளீர். எந்நிலை அறியீர்?
அரச னிடத்தில் அறைந்திரே என்று
வெறுப்புடன் நின்றனர். விளம்புவான் ஒருவன்:

“விரைவில் விடுதலை வேண்டும் எமக்கே.
கற்றனர் நாட்டினர் கண்டீர் அன்றோ!
ஒற்றுமை உடையோம் உணர்ந்தீர் அன்றோ!
வேற்றுமைக் குள்ள வித்தும்அங் குளதோ?
ஆற்றுந் தொண்டெலாம் அறத்தொண் டல்லவோ?
மாழைநாட்டினர் வந்தபின் அன்றோ
ஏழைமை தன்னை எய்திற்றுக் கொன்றை!
ஆளுந்திறமை அற்றோமா? எம்
கேளும் கிளையும் கெட்டொழிந்தனவோ?
ஆளி சுமந்த அருமணி இருக்கையும்,

55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/56&oldid=1484484" இலிருந்து மீள்விக்கப்பட்டது