பக்கம்:காதலா கடமையா.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அப்போது நானோ ஆர்என்று கேட்டால்
தப்புடைய மேல் சாதியைச் சேர்ந்தோன்.”

உழவன் பாட்டை ஒருசொல் விடாமல்
கிழவனும் மனைவியும் கேட்டிருந் தார்கள்.

“பாரிடைப் படர்ந்து பறிபடாச் சாதியின்
வேரிடை வெந்நீர் விட்டுக் களைந்தனர்
ஆரும் மறவா ஐந்து சாதியின்
பேரும் மறந்தார் பெருநாட்டார்கள்”
என்றான் கிழவன். இயம்புவாள் மனைவி
“நற்றொண் டாயினும் நாம் இதை இன்று
குற்றமென்று கூற வேண்டுமே?”
எனலும், “ஆம்ஆம்” என்றான் கிழவன்
“மனு எனும் கடவுள் மக்களுக் களித்த
சாதி ஒழுக்கம் தலைகீழ் ஆம்படி
தீது செய்தீர் தீது செய்தீர்
என்றுநாம் குற்றம் இயம்ப வேண்டும்”
என்றாள் மனைவி. “எழுதிவை ஏட்டில்”
என்றான் கிழவன். ஏட்டில், மனைவி,
நிறத்தின் வேறுபாட்டை
அறுத்தது குற்றம்என் றழுத்தினாள் எழுத்தையே.

60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/61&oldid=1484511" இலிருந்து மீள்விக்கப்பட்டது