பக்கம்:காதலா கடமையா.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருக்கும் சொத்தில் என் விழுக்காட்டை
அளிக்கும் படியும், அன்றைய மணத்தைக்
கிறுக்கும் படியும் கேட்பதென் வழக்கென,”

மன்றுளான் சான்றினர் வருக என்னலும்
அறுவர் சான்றினர் ஆம்எனப் புகலவும்
மறம் இழைத்தானை வருக என்னலும்
வந்தவன், பிழையை மறைக்க முயலலும்
இந்தா தீர்ப்பென இயம்புவான் மன்றினன்:

“மங்கை தன்னை மதியாமை குற்றம்,
பங்குக்குரியவள் பகர்ந்த மறுப்பையும்
எண்ணாதொருத்திக் கீந்தது குற்றம்!
ஆதலின்,
நாட்டின் பேழைக்கு நாற்பது வராகன்
கட்டுக, சொத்திரு கூறு படுத்துக,
ஒருகூறு தருக ஒண்டொடி தனக்கு!
வரும்உன் பங்கில் இருபது வராகன்
சேயிழை இனிமேல் செயத்தகு மணத்தின்
செலவுக்குத் தருக" என்றான். நின்ற
இலவுக்கு நிகர் இதழ் ஏந்திழை மகிழ்ந்தாள்.

மறைவில் நின்று வழக்கு நடந்த
முறையை அறிந்த முதியனும் மனைவியும்
தம்மில் பேசுவார் :

“இம்முறை நன்றென” இயம்பினான் கிழவன்
“அரசினர் மன்றம் அங்கே இருக்கையில்
ஒருமன்றிவர்கள் உண்டாக் கினர்” எனக்
குற்றம் சுமத்தினாள். “கூறியது
சொற்றிறம்” என்று சொன்னான் கிழவனே.

62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/63&oldid=1484427" இலிருந்து மீள்விக்கப்பட்டது