பக்கம்:காதலா கடமையா.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாட்டு மருத்துவன் நகைத்து, “முன்னெலாம்
அச்சம் தரும்படி முச்சியன் வரைந்ததை
மெச்சும் உருவென மேற் சுவரில் மாட்டி
அதற்குச் சோறு முதற்பல படைத்தும்
எதிர்கீழ் வீழ்ந்தும், இருகை கூப்பியும்,
இறையே இறையே எனக்கும் மனைக்கும்
உறைமக் களுக்கும் கறவை மாட்டுக்கும்
பிணியென ஒன்றும் அணுகா வண்ணம்
அணித்திருந்தருள்வாய் என்பதுண்டாம்,
அன்றியும்,
மைந்தர்க்கு நோய் வரின் மலையின் உச்சியில்
குந்தி இருப்பதாய்க் கூறும் இறைக்குக்
கைப் பொருள் கொண்டு காலிடை வைப்பதாய்
செப்பி, அங்குளான் தின்னத்தருவதோர்
உறுதி சொல்லி, உறுநோய் மைந்தன்
இறுதி பெறும்வரை இருப்பாராம் வாளா!
எல்லைக் கடவுள் என்பதொன் றுண்டாம்
தொல்லை தீர்க்கச் சொல்லி அதற்குக்
குருதியும் சோறும் தெருவில் இட்டே
இருகை கூப்பி இறைஞ்சுவாராம்.
கூரை சலசலப்புக் கொள்ளுமாயின்
சீரிலாக் கடவுள் சீறிற்றென்று
தோப்பில் மண்ணால் ஏற்படுத்திய
காப்புக் கடவுள் கருத்து மகிழக்
கொழுத்த பன்றியின் கழுத்தை யறுத்துப்
படையலிட்டுப் பணிவதுண்டாம்!
நோய்வராதிருக்கவும் நோய் வரின் தணிக்கவும்
போய்ப் பல கடவுளைப் போற்றுவ துண்டாம்!

64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/65&oldid=1484430" இலிருந்து மீள்விக்கப்பட்டது