பக்கம்:காதலா கடமையா.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சடுதியில் ஒருபடை தாரோன் தன்னையும்
வடுவொன் றில்லா வாட்பொறை தன்னையும்
சிறையில் சேர்த்துச் சிரித்து நின்றது!

தங்கவேல் கண்டு தளர்வுற்றிருந்தான்.
கிள்ளை பெருந்துயர் வெள்ளத்தாழ்ந்தாள்.
கொன்றை நாடழுதது; கொதித்தது நெஞ்சம்.
அன்று, மணிப்பொது மன்றில் அரசன்.
தனிமையில் அழைத்தான் தங்கவேலனை.

“இனியும் கிள்ளை இணங்க மாட்டாளோ”
என்று கேட்டான். இசைத்தான் தங்கவேல்:

“ஒன்று கேட்க! ஊர்ப்பொது மக்களின்
தலைவரைச் சிறையில் தள்ளியது கொடிது
புலையோ, களவோ, கொலையோ புரிந்தார்
குற்றம் என்ன கோவே? வாட்பொறை,
மற்றவர் இழைத்த குற்றமும் சொல்வீர்?
ஒருவனை விரும்பிய ஒண்டொடி யைப்பெறத்
திருவுடை நாட்டின் சீர ழிப்பதோ?”
என்று தோள் அதிர, இருநீர்விழி யுடன்
சொன்னான். சிரித்து மன்னன் சொல்வான்:

“தங்கவேல், இங்கிருந்து தைய லிடம்போய்
அங்கே, மன்னனின் அழுகை நீக்கி
நாட்டு மக்களின் நலிவை நீக்கென்று”
கூறுக. உன்றன் குறையைப் பின்னர்
கூறுக என்று கூறிய அளவில்
தங்கவேல் கிள்ளைபால் சென்றான்
அங்கவள் உளத்தை அரசனுக் காக்கவே.

74

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/75&oldid=1484413" இலிருந்து மீள்விக்கப்பட்டது