பக்கம்:காதலா கடமையா.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நேருறக் கேட்டு நின்று தயங்கினான்.
மக்கள் ஒருங்கே வாய்விட்டுக் கூறினார்:
“இக்கொடு மைக்கெலாம் இருவரே காரணர்.
மங்கைகிள்ளை மன்னனை மணக்க,
மகிணன் இதனை மறுத்தல் வேண்டாம்.”
இவ்வாறு கூறி இடுப்புத் தளர்ந்தே
எவ்வாறு நடப்போம் எவ்வாறு வாழ்வோம்
பசிநோய், பசிநோய். பதைப்புறச் செய்ததே
புசிஎன எவரும்ஒன்று போடா ரோஎனப்
படுத்தார் அங்கே பற்பலர். வீழ்ந்து
துடித்தார் சில்லோர். தொழுதார் சில்லோர்
இமைக்கும் நேரத்தில் தமிழர் எதிரில்
சுமைசுமை யாகத் தூய பழங்களும்,
கிழங்கு பலவும் தழலிட் டெடுத்த
கொழும்பயறு கொட்டைபலவும்
தழற்காட்டு மழைஎனச் சாய்த்தனர். அவரவர்
விழுக்காடு பெற்று விழுங்கினர். உடனே
கல்மலை மூன்றின்மேல் பொன்மலை ஒன்றென
அடுப்புமேல் தாழியில் அரிசி யிட்டு
வெள்ளி மலைபோல் வெஞ்சோறு படைக்க
அள்ளூறு சுவைக்கறி ஆக்கியும் படைக்கக்
கலந்துண்ட மக்களின் கருத்தில், மன்னனை
இலங்கிழை மணக்கா திருப்பா ளாயின்
இன்று பட்டதே இனிப்பட நேருமே
என்ற நினைவே எழுந்ததால், நடுங்கி,
“மகிணத் தலைவர் மறுக்க வேண்டாம்
தகுமன்னனுக்கும் தையலுக்கும்
மணம்புரி வீர்” என்று வாய்விட்டுக் கூவினார்.

88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/89&oldid=1484403" இலிருந்து மீள்விக்கப்பட்டது