பக்கம்:காதலா கடமையா.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உண்ணும் உணவிலான் உடுக்கத் துணியிலான்
கண் உறங்கக் கால் முடங்கு கூரையான்
பொன்னுளத்தைப் பொதுவுளம் ஆக்கியும்.
வீட்டுக் கன்னை மிகவுழைப் பதுபோல்
நாட்டுக் குழைக்கும் நாட்டம் மிகுத்தும்
இகழ்ந்திடும் எதிரியும் இருகை ஏந்திப்
புகழ்ந்திடப் பெற்ற மகிணன், நாடொறும்,
தோகையின் அன்பில் துளி விழுக்காடு
நோகாது பெற்று நுண்ணிடை யாளுடன்
இரண்டுடல் இரண்டுயிர் இனமாற்றிப் பிணைந்தவாறு
திகழ்ந்தான். இந்தத் தெவிட்டாக் கவிதையைப்
புகழ்ந்தால் புகழே புகழ் பெறும் அன்றோ?
தீப்பட்டுக் குதிப்பொடு சேர்ந்தார் போலக்
கூப்பாடு போட்டனர் கூட்ட மக்கள்!
நெருக்கினர். மணவினை நிகழ்த்தினர். தேறுதல்
உரைத்தனுப்பி ஓடிவந் தேனிங்கு!
மன்னவன் மலர்வாய், இன்னல் இன்றி
நன்மொழி ஒன்று நவிலுக” என்றான்.
என்னுயிர், கிள்ளையால் இங்கு நிலைப்பது.
மன்னிய மக்களின் வாழ்வென் னிடத்தது.
மாற்றம் இலையென மன்னன் சொன்னான்.
காற்றில் கனல்ஏறும் கடுமொழி கேட்ட
வாட்பொறை, நன்று மன்னா, காலையில்
இன்னது விடையென இயம்புகின்றேன்
இன்னல் அதுவரை இழைத்தல் வேண்டாம்
என்று சொன்னான். சொன்னதும்,
நன்றென மன்னன் நவின் றிருந் தானே.

91

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/92&oldid=1484407" இலிருந்து மீள்விக்கப்பட்டது