பக்கம்:காதலா கடமையா.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காதலா கடமையா

காதல் என்னில். சாதலோ மக்கட்கு?
மீட்சி என்னில், வீழ்ச்சியோ கற்புக்கு?
நல்லிராப் போதும் நலிஇரக் கம்கொளச்
செல்வி படுப்பதும் திடுக்கிட் டெழுவதும்
ஆகஇருக்கையில், அப்போ தங்கே
தாரோன் வந்து தையல்பால் கூறுவான்:

“மக்கள் விடுதலை மறுப்பது நன்றா?
விடிந்தால் என்ன கொடுமை நேருமோ,
அடிவயிறு தீப்பட அங்கவர் நைந்தனர்
என்னசொல் கின்றாய் இந்நாட்டு மக்கட்கு?
மின்னும் முடிபுனை வேந்தனோ, வாட்பொறை
என்ன சொல்லியும் இம்மியும் ஒப்பிலான்,
கிள்ளையை மணந்து கொள்ளவேண்டும்.
எள்ளளவும் பொறேன். இதனை ஒப்பினால்
கொன்றைநாடு கொழுந்துவிட் டெரிவதை
என்கை விலக்கும்; இயற்றுக” என்றான்,
என்று தாரோன் இயம்ப, ஏந்திழை,

“ஈக்களும் நுழையா தாக்கித் தொங்கவிடு
தூக்கணம் புட்கள் கூட்டொடு தொலைந்தாங்கு
நானும் என்னுளம் நண்ணும்அச் செல்வனும்
தீநனி வளர்த்ததில் செத்தொழிந் திடவோ?
அன்றி, எம்மை அறுத்துக் கழுத்தைக்
கொன்று போடும் கொள்கை யுடையிரோ?
ஆயினும், நாடுபடும் அல்லல் நினைக்கில்
தீயினில் வீழ்வதும் சிறந்ததே ஆகும்.
சாவதும் என்னைச் சார்ந்த செய்தியோ?
நாவால் அவரே நவில வேண்டும்.
என்றன் வாழ்வில் இரண்டைக் கேட்டேன்.

93

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/94&oldid=1483549" இலிருந்து மீள்விக்கப்பட்டது