பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 111

‘அம்மா, அம்மா! நானும் வருகிறேன், அம்மா’ என்று கத்திக்கொண்டே இரண்டடி எடுத்து வைத்தாள் அவள். அதற்குள், ‘ஏன் வருகிறாய், எங்கே வருகிறாய் என்று அவர்கள் கேட்டால் என்ன பதில் சொல்வது? என்ற எண்ணம் குறுக்கிட்டது-ஏதோ காரியமாகப் போனோம், வந்தோம் என்றால் பரவாயில்லை; ஒரு காரியமும் இல்லாமல் ஒரு நாள் முழுவதும் ஒரு வீட்டில் உட்கார்ந்திருப்பது என்றால்?-பார்ப்பவர்களின் உள்ளத்தில் எத்தனையோ விதமான சந்தேகங்களை எழுப்புமே, அது

அதற்கெல்லாம் என்ன சமாதானம் சொல்லிக்கொண்டு இருப்பது? அப்படியே சொன்னாலும் அதை எத்தனை பேர் நம்புவார்கள்?

வேண்டாம்; அனாவசியமாக அவர்களுக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டாம்!

இந்த முடிவுக்கு வந்ததும் அவள் மறுபடியும் முன்னால் எடுத்து வைத்தக் காலைப் பின்னால் எடுத்து வைத்தாள்.

ஒரு வேளை நாம் அழைத்தது அவர்களுடைய காதில் விழுந்திருக்குமோ?-பார்த்தாள்; கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள்-இல்லை; விழவில்லை.

விழுந்திருந்தால் இந்நேரம் திரும்பி வந்து, ‘ஏன்?” என்று கேட்டிருக்க மாட்டார்களா, அவர்கள்?-இல்லை, விழவில்லை.

நல்ல வேளை, பிழைத்தேன்-நீண்ட பெருமூச்சுடன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள் அவள்; மணி ஒன்று!

எப்படியோ அரை நாளைக் கழித்துவிட்டோம்; இன்னும் அரை நாள்தான் பாக்கி-எங்கேயாவது போய், எதையாவது சாப்பிட்டுவிட்டு...

எங்கே போவதாம், எதைச் சாப்பிடுவதாம்?-ஒன்றும் இறங்காது; இப்போதுள்ள நிலையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு ஒன்றுமே இறங்காது!