பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 207

‘ஆமாம்; அவனை நாம் அங்கிருந்து அழைத்துக் கொண்டு வரவேண்டுமே, அதற்கு என்ன செய்யலாம் என்று கேட்கத்தான் உங்களைத் தேடி வந்தேன் நான்!” என்றான் மணி.

‘அந்தக் கவலை இனி உனக்கு வேண்டாம்! அதற்கு வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் நான் செய்துவிட்டேன்; இன்னும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அவன் இங்கே வந்து விடுவான்’ என்றார் ஆபத்சகாயம்.

‘அப்படியா ரொம்ப மகிழ்ச்சி; நான் வரட்டுமா?” என்று எழுந்தான் மணி.

‘அதற்குள் என்ன அவசரம், உட்கார் அப்பா!’ என்று அவனை மறுபடியும் உட்கார வைத்துவிட்டு, தன் மனைவி அன்னபூரணியம்மாளைக் கீழேப் போகுமாறு அவனுக்குத் தெரியாமல் சாடை காட்டினார் ஆபத்சகாயம்.

தனக்கு முன்னால் பலகாரத் தட்டை வைத்துவிட்டு அந்த அம்மாள் கீழே சென்றதும், ‘என்னிடம் நீங்கள் கொண்டுள்ள அன்புக்கு நன்றி இப்போது நான் எதையும் சாப்பிடக்கூடிய நிலையில் இல்லை; வருகிறேன்’ என்று மறுபடியும் எழுந்தான் மணி.

‘வந்ததே வந்தாய்; மோகன் வந்த பிறகு அவனையும் பார்த்துவிட்டுத்தான் போயேன்’ என்றார் ஆபத்சகாயம், அவனை எப்படியாவது அங்கே சிறிது நேரம் தங்க வைக்க வேண்டுமே என்பதற்காக.

‘எனக்கும் அவனைப் பார்க்க வேண்டும்போல்தான் இருக்கிறது; ஆனால் அதற்கு முன்னால் வேறொருவரை நான் உடனே பார்க்கவேண்டியிருக்கிறது”

‘யாரை, சர்மாஜியையா?” “ஆமாம்; அவரையும் உங்களுக்குத் தெரியுமா?” ‘ஏன் தெரியாது? என்னைப் போன்ற போலீஸ் அதிகாரிகளுக்கு அவரைப் போன்றவர்கள்தானேப்பா, பொன் முட்டை இடும் வாத்துக்கள்!"