பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 213

மணியால் பொறுக்க முடியவில்லை; ‘'முடியா விட்டால் போங்கள், நான் வருகிறேன்!” என்று அவர் முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்டு எழுந்தான்.

இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் ஆபத்சகாயத்துக்குக் காரியம்தான் பெரிதாகத் தோன்றுமே தவிர, வீரியம் பெரிதாகத் தோன்றாது. எனவே அப்போதும் அவர் அடக்கத்துடன், ‘உட்கார், அப்பா பலகாரம் சாப்பிடா விட்டாலும் காபியாவது சாப்பிட்டுவிட்டுப் போயேன்!’ என்று சொல்லி, அவனை மீண்டும் உட்கார வைக்கப் பார்த்தார். அவன் உட்காரவில்லை; அதற்குள் ஏதோ சிந்தனை வயப்பட்டவனாக நின்றது நின்றபடியே இருந்தான்.

“சரி, காபிதானே? எப்படிச் சாப்பிட்டால் என்ன, நின்று கொண்டேதான் சாப்பிடேன்! என்று சொல்லி அதையும் சமாளித்துவிட்டு, ‘அன்னபூரணி ஏ, அன்னபூரணி” என்று மேலே இருந்தபடியே குரல் கொடுத்தார் அவர்.

“என்ன, வரலாமா?” என்றாள் அவள், கீழே இருந்தபடி

‘வா, வா! காபியை எடுத்துக்கொண்டு மேலே வா, சீக்கிரம்’ என்றார் அவர்.

30. உண்மை ஓர் அனாதை!

LDனிதன் விசித்திரமானவன்; அவனைவிட விசித்திர மானது அவனுடைய உள்ளம். இந்த இயற்கை நியதியை ஒட்டியோ என்னமோ, ஆபத்சகாயத்தின்மேல் கொண்ட ஆத்திரம் சிறிது நேரத்துக்கெல்லாம் அனுதாபமாக மாறிற்று மணிக்கு. அந்த அனுதாபத்தின் காரணமாக அவர் கொடுத்த காபியை வேண்டா வெறுப்பாகக் குடித்துவிட்டு அவன் கீழே இறங்குவதற்கும், மோகன் மேலே வருவதற்கும் சரியாயிருந்தது.