பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 காதலும் கல்யாணமும்

‘அடப் பாவமே, அதற்காக ஆபீசிலிருந்து வந்ததும் இவர் அடுக்களைக்காப் போவது? சார், இங்கே வாருங்கள் சார் நான் வேண்டுமானால் அந்த ரொட்டியைச் சுட்டுத் தருகிறேன்!” என்றாள் பாமா.

‘'வேண்டாம்; இன்று ஒரு நாள் தானே உங்களால் சுட்டுக் கொடுக்க முடியும், நாளைக்கு?’ என்றார் அவர்.

‘அதற்கு ஒரு சமையற்காரனையாவது வைத்துக் கொண்டிருக்கலாமே?’ என்றாள் அவள்.

‘ஏற்கெனவே நமக்குள் இருக்கும் வகுப்புகள் போதாதென்று அப்படி ஒரு வகுப்பைச் சிலர் வளர்த்துக் கொண்டு வருகிறார்கள்; அந்தத் தொண்டில் நானும் ஈடுபட விரும்பவில்லை. ஏனெனில், அவரவர்களுடைய வேலையைக் கூடிய வரை அவரவர்களே செய்து கொள்ள வேண்டுமென்று விரும்புபவன் நான்’ என்றார் அவர்.

இந்தச் சமயத்தில் மோகன் குறுக்கிட்டு, ‘அதற்காகக் கல்யாணம் செய்துக் கொள்ளாமல் இருந்து விடாதீர்கள்; அதனால் ஒரு பெண்ணின் வாழ்வு பாதிக்கப்படலாம்’ என்றான் சிரித்துக் கொண்டே

‘முதலில் உங்கள் கல்யாணம் நடக்கட்டும்; அதற்குப் பிறகு என்னுடையக் கல்யாணத்தைப் பற்றி நான் யோசிக்கிறேன்!” என்றார் அவர்.

இதைக் கேட்டதும் தன்னை மனதில் வைத்துக் கொண்டுதான் அவர் அப்படிச் சொல்கிறாரோ என்று நினைத்தது அருணாவின் உள்ளம்; ஆனால் அவர் அப்படி நினைக்கவில்லை!

சிறிது நேரத்துக்குப் பிறகு அவர்கள் நால்வரும் சேர்ந்தாற்போல் ரொட்டியுடன் போராடிக் கொண்டிருந்த போது, ‘ஆமாம், இவர்கள் மட்டும்தான் உங்களுக்குக் கிடைத்தார்களா இங்கே அழைத்துக் கொண்டு வர? அப்பாவும், அம்மாவும் கிடைக்கவில்லையா?’ என்றாள் அருணா, பரந்தாமனை நோக்கி.