பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 27

விஷயங்களில் அபிப்பிராயம் சொல்ல எங்கே தகுதி இருக்கப் போகிறது?’ என்று நினைத்த மோகன், அவளிடம் போகவில்லை. அதற்குப் பதிலாக மறுபடியும் சீட்டியடித்துக் கொண்டே சென்று அவன் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தான்; சிவாஜி கணேசனைப்போல் இருப்பதாகத் தோன்றியது. சீட்டியடிப்பதை நிறுத்திவிட்டுப் பார்த்தான்; ஜெமினி கணேசனைப்போல் இருப்பதாகத் தோன்றியதுஅப்புறம் என்ன, அது போதாதா?

‘தன் கண்ணே தனக்குச் சாட்சி!’ என்ற திருப்தியுடன் அவன் திரும்பியபோது, கொஞ்சமும் எதிர்பாராத விதமாக அவனைப் பிடித்து இழுத்துப் பலவந்தமாகக் கீழே உட்கார வைத்து அவன் தலையில் எண்ணெய் தேய்க்க ஆரம்பித்துவிட்டாள், அவனுடைய அம்மா

பாவம், எண்ணெய் தேய்த்துக் குளித்தால் எந்தச் சுருட்டை முடி கலைந்து விடுமென்று அத்தனை நாளும் அவன் பயந்து கொண்டிருந்தானோ, அந்தச் சுருட்டை முடி அன்று அவள் கையில் அகப்பட்டுக் கொண்டு படாத பாடுபட்டது

அன்று மாலை, முதல் நாள் அளித்த ஏமாற்றத்தைப் பாமா அவனுக்கு அளிக்கவில்லை; தோளோடு தோள் கூட்டிக் கடற்கரைக்கு வந்தாள்.

‘உலகத்தின் புகழ் பெற்ற கடற்கரைகளில் ஒன்றான இந்த மெரீனாவிலே உன்னையும் என்னையும் தவிர வேறு யாரும் இல்லாமல் இருந்தால்...?”

மோகன் முடிக்கவில்லை; ‘இல்லாமல் இருந்தால் என்னவாம்?’ என்று இடைமறித்துக் கேட்டாள் பாமா.

“தோளோடு தோள் மட்டுமா கூடியிருக்கும்?’ என்றான் அவன், விஷமத்தனத்துடன்.

அவள் சளைக்கவில்லை; ‘வேறு என்ன கூடி யிருக்கும்?’ என்றாள், அவளும் விஷமத்தனத்துடன்.