பக்கம்:காதல் நினைவுகள், பாரதிதாசன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதிதாசன்

13


பணப்பிள்ளை கிடைக்க — அவன்மேல்
       பாய்ந்து மணம்பேசி
இணக்கம் செய்துவிட்டார் — மணமும்
       இயற்றநாள் குறித்தார்.
மணத்தின் ஓலைப்படி — நகரின்
       மக்களும் வந்திருந்தார்.
பார்ப்பனன் வந்துவிட்டான் — மணத்தின்
       பந்தலில் குந்திவிட்டான்.
‘கூப்பிடும் மாப்பிள்ளையைப் — பெண்ணினைக்
       கூப்பிடும்’ என்றுரைத்தான்.
ஆர்ப்பாட்ட நேரத்திலே — ஐயகோ
       ஆகாய வீதியிலே
போய்ப்பாடும் மங்கையுள்ளம் — கணக்கன்
       பொன்னான மேனியினை!

கொட்டு முழக்கறியான் — கணக்கன்
       குந்தி இருந்தகடை
விட்டுப் பெயர்ந்தறியான் — தனது
       வீணை யுளத்தினிலே
கட்டிச் சருக்கரையைத் — தனது
       கண்ணில் இருப்பவளை
இட்டுமிழற்று கின்றான் — தனதோர்
       ஏழ்மையைத் தூற்றிடுவான்.

பெண்ணை அழைத்தார்கள் — மணமாப்
       பிள்ளையைக் கூப்பிட்டனர்.
கண்ணில் ஒருமாற்றம் — பிள்ளைக்குக்
       கருத்தில் ஏமாற்றம்
“பண்ணுவதாய் உரைத்தீர் — நகைகள்
       பத்தும் வரவேண்டும்;
எண்ணுவதாய் உரைத்தீர்--தொகையும்
       எண்ணிவைக்க வேண்டும்.”

“என்றனன் மாப்பிள்ளைதான்“ — பெண்ணினர்
      “இன்னும் சிலநாளில்
ஒன்றும் குறையாமல் அனைத்தும்
       உன்னிடம் ஒப்படைப்போம்.