பக்கம்:கானகத்தின் குரல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ థ్రికెళ్ ఫౌజౌ...ఊ 必 நாடோடியாக அலைந்த குற்றத்திற்காக அவருக்கு மூன்று மாத சிறைத்தண்டனை கிடைத்தது, பிறகு ஒக்லாந்து சேர்ந்தார். தமக்குத் தண்டனை விதித்தது நியாயமல்லவென்று அவர் எண்ணினார். சோஷலிசக்கொள்கையை நோக்கி அவர் மனம் சென்றதற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்தது. இவ்வாறு வாழ்க்கை நடத்துவதில் ஒரு பயனுமில்லை என்பதையும் அவர் அந்தத் தண்டனையால் உணர்ந்தார். அதனால் வீட்டுக்குத் திரும்பியதும் அவர்தமக்கையிடம் பணம் கடன் வாங்கிக்கொண்டு ஒக்லாந்து உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து படிக்கலானார். கல்லூரிக்குச் செல்லவேண்டுமென்பது அவருடைய நோக்கம். பண்பாட்டை விரும்பி அவர் கல்லூரியிற் சேர முயலவில்லை. எழுத்தாளராக வேண்டும் என்பது அவருடைய விருப்பம். ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் சூறாவளியைப் பற்றி ஒரு பத்திரிகைக்குக் கட்டுரை எழுதிப் பரிசு பெற்றிருந்தார். அந்த வெற்றி அவருடைய உள்ளத்தில் பதிந்திருந்தது. கற்பனைக்கதைகள் எழுதவேண்டும் என்ற ஆவல் அவரைப் பற்றிக்கொண்டது. இசையால் புகழ் பெற்ற சிக்னாவைப்போல் அவர் எழுத்தால் புகழ் பெற விரும்பினார். உடல்நலங்குன்றிய கிழத்தந்தைக்கும், தமக்கைக்கும் தமது எழுத்துவன்மையால் பெருஞ்செல்வம் தேடிக் கொடுக்க அவர் ஆவல் கொண்டார். இந்தக் கனவை நனவாக்க அவர் அரசு உயர்நிலைப்பள்ளியிலே மிகுந்த சிரத்தையோடு படித்தார். பிறகு ஒரு தனிப்பள்ளியிலே சேர்ந்து இன்னும் வேகமாகக் கற்க முற்பட்டார். இவ்வாறு இரண்டாண்டுகள் படித்த பின் அவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அவருக்கு அங்கு நடைபெற்ற போதனாமுறை பிடிக்கவில்லை. கதைகள் எழுதுவதில் பயிற்சியை அவர் நாடினார். அதற்கு யாரும் உதவி செய்யவில்லை. மேலும் அவர் கையிலிருந்த பணமும் தீர்ந்துவிட்டது. அதனால் கல்லூரியில் ஓராண்டு முடிந்ததும் அவர் ஒரு சலவைச்சாலையில் வேலை செய்யத்தொடங்கினார். இதற்கு மத்தியில் அவர் தமது அனுபவங்களையும் படிப்பையும் பயன்படுத்திக் கட்டுரைகளும், சிறுகதைகளும், செய்யுள்களும் எழுதிக் குவித்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு பத்திரிகாசிரியரையும் நாடியலைந்தார். பயன் ஒன்றும் ஏற்படவில்லை. ஏதோ ஒன்றிரண்டு சிறு கட்டுரைகள் மட்டும் உள்ளூர்ப்பத்திரிகையில் வெளியாயின. சலவைவேலை செய்யத் தொடங்கிய பிறகு மிகுந்த உழைப்பால் அவருக்கு எழுதவும் முடியவில்லை.