பக்கம்:கானகத்தின் குரல்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாக்லண்டன் 41 இரவுக்கு முன்னதாகவே பின்னால் ஏற்படும் காலநிலைமையைப் பற்றித் தெரிந்துகொள்ளும் சக்தி அதற்குத் தனிச்சிறப்பாக அமைந்தது. அது இரவு நேரத்திலே எந்த இடத்தில் வளை தோண்டிப் படுத்தாலும் அந்த வளை காற்றடிக்கும் திசையிலிருந்து ஒதுங்கவே இருக்கும். வளை தோண்டும்போது காற்று கொஞ்சம் கூட அடிக்காமலிருந்தாலும் பின்னால் வரப்போகும் காற்றின் திசையை அது சரியாகத் தெரிந்துகொள்ளும். அனுபவத்தால் மட்டும் அது எல்லாம் கற்றுக் கொள்ளவில்லை. அதற்குள்ளே மறைந்துபோனவை போலக் கிடந்த இயல்பூக்கங்கள் மறுபடியும்உயிர்பெற்றன. மனிதனோடு பழகி நாகரிகவாழ்க்கை நடத்திய அதன் முன்னோர்களின் வாழ்க்கைமுறை அதனிடமிருந்து மறையலாயிற்று. ஆதி காலத்திலே கானகத்திலே கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து தங்கள் இரையைத் தேடிய அந்தக் காட்டுநாய்களின் வாழ்க்கைமுறையின் வாசனை மெதுவாக அதற்கு நினைவிற்கு வந்தது. ஒநாய் போலத் தாக்குவதையும், திரும்பி ஓடுவதையும் கற்றுக்கொள்வது அதற்குப் பெரிய காரியமல்ல. மறந்துபோன அதன் ஆதிமூதாதைகள் இப்படித்தான் சண்டையிட்டன. பாரம்பரியமாகப் பதிந்திருந்த இந்தப் பழைய வாழ்க்கைமுறையும், பழைய தந்திரங்களும் முயற்சியில்லாமலேயே மேலெழுந்தன. குளிர் மிகுந்த அமைதியான இரவுகளில் நட்சத்திரங்களை நோக்கிக் கொண்டு ஒநாயைப்போலப் பக் ஊளையிடும்போதெல்லாம், பல நூற்றாண்டு களுக்கு முன்னால் வாழ்ந்து மறைந்து மண்ணாய்ப்போன அதன் மூதாதைகளே அதன் மூலமாக ஊளையிட்டன. அதன் குரலிலே அந்தச் சமயத்தில் தொனிக்கும் உணர்ச்சிகளெல்லாம் அதன் மூதாதைகள் குளிரையும் இருட்டையும் கண்டு பட்ட துன்பத்தின் உணர்ச்சிகளேயாகும். வாழ்க்கை ஒரு பொம்மலாட்டம் என்பதற்கு அறிகுறியாக பண்டைக்காலப் பழமை உணர்ச்சிகள் அதற்குள்ளே பொங்கி எழுந்தன. பக் பழைய பூர்வீக வாழ்க்கை நிலையை எய்திற்று. வடக்குப் பனிப்பிரதேசத்திலே தங்கம் கிடைப்பதை மக்கள் அறிந்தனர். தோட்டக்காரனுக்கு உதவியாகப் பணி செய்த மானுவெலின் கூலி அவன் மனைவியையும், பிள்ளை குட்டிகளையும் காப்பாற்றப் போதுமானதாக இல்லை. இந்தக் காரணங்களின் விளைவாய் பக்கின் வாழ்க்கையில் இத்தகைய மாறுதல் ஏற்பட்டது.