பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

இந்த நிலையில் உள்ள பக்தர்கள், துன்பம் வந்தால், இறைவன் நம்மைத் தூய்மைப் படுத்த நல்கிய மருந்து என்று கொள்வார்கள். நோய் உள்ளவன் மருத்துவன் தரும் மருந்தை, விலை உயர்ந்தது, நன்மை தருவது என்று எண்ணி உண்ணுவதுபோல, துன்பங்களையும் இறைவன் அருளால் விளைந்தவை என்று கொள்வது முறுகிய அன்புடையார் இயல்பு.

"இடும்பைக் கிடும்பைப் படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்”

என்று திருவள்ளுவர் சொல்கிறார். துன்பங்களை மன மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறவர்கள் அந்தத் துன்பத்துக்கே துன்பத்தைத் தருவார்கள். அத்தகைய திண்ணமான மனம் எப்படி வரும்? இறைவன் திருவருட் சார்பாலே யாவற்றையும் காணுபவர்கள் அந்த நெஞ்சத் திண்மையைப் பெறுவார்கள். இதை அம்மையார் சொல்கிறார்.

“—அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன்; எஞ்ஞான்றும்
எப்பொருளும் ஆவது எனக்கு.”

எல்லாம் கடவுள் மயம் என்று பார்க்கும் திவ்ய தரிசனத்தைப் பெற்றவர் அம்மையார். ஆதலின் அவர் அபேதமான காட்சியையே காணுகிறார்; அபேத அநுபவத்தையே பெறுகிறார். எல்லாம் அருள் மயமாகப் பார்க்கிறார்.

"அருளே உலகெலாம் ஆள்விப்ப(து), ஈசன் அருளே பிறப்பறுப்பது: ஆனால்- அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன், எஞ்ஞான்றும்
எப்பொருளும் ஆவ(து) எனக்கு.”