பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12. அதுதானா?


அம்மையார் 10-ஆவது பாட்டில், "எனக்கவனைக் கொண்டேன் பிரானாகக், கொள்ளலுமே இன்புற்றேன்; உண்டே எனக்கரிய தொன்று” என்றும், அடுத்த பாட்டில் 'பொங்கொளிசேர் அங்கையாற்காளாம் அது ஒன்றே நினைந்திருந்தேன்’ என்றும் சொன்னார். இறைவன் தமக்குப் பிரானானதும், அவனால்தாம் ஆட்கொள்ளப்பட்டதுமாகிய இரண்டையும் அவ்விரண்டு பாட்டிலும் சொன்னார்.அவன் தமக்குப் பிரானான பிறகு பேரின்பப் பெருவாழ்வு வந்ததென்றும், தமக்கு அரிய பொருள் ஏதும் இல்லாத நிலை வந்ததென்றும் சொன்னார். இறைவன் பிரானாகி விட்டதால் உண்டான நிலை அது. அடுத்தபடி ஒன்றையே நினைந்து, ஒன்றையே. உள்ளடைத்து ஆளானதைச் சொன்னார். தாம் ஆளானதாகச் சொன்னாலும் இறைவன் அவ்வாறு தம்மை இருக்கச் செய்து ஆட்கொண்டான் என்பதே அவர் கருத்து.

இவ்வாறு அவன் பிரானானதும், தாம் அவனுக்கு, ஆளானதும் நினைக்க நினைக்க இன்பத்தைத் தருவனவாகவும். இறைவன் கருணையைப் புலப்படுத்துவனவாகவும் உள்ள செயல்கள். பிரானானது முந்தியா ஆளானது முந்தியா என்ற கேள்வி பிறக்கலாம்.

நாம் இறைவனை உணராமல் வாழ்கிறாேம். அவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. அதனால் அவனைச் சிந்திப்பதும் இல்லை. என்றாலும் இறைவன் நம்மை விடுவதில்லை. அவன் எப்போதும் நம்மைக்