மாலை நேரம். கதிரவன் மேற்கு வானத்திலே நின்று மேகங்களினிடையே வர்ண ஜாலங்கள் செய்து கொண்டிருக்கிறான். இளங் காற்று வீசுகின்றது. அந்தக் காற்றிலே மிதந்து வருகிறது ஒர் இனிமையான கவிதை. அதைக் கவிதை என்று சொல்லுவதா, பாட்டு என்று சொல்லுவதா, உள்ளத்தின் மழலைத் துடிப்பு என்று சொல்லுவதா-என்ன சொல்வதென்று எனக்குத் தோன்றவில்லை. புலவர்களின் வரையறைகளை வைத்துப் பார்க்கும்போது அது கவிதை என்கின்ற வரம்புக்குள் அடங்குவது அரிது. ஆனால், அதில் கவிதையே இல்லையென்று கூற முடியாது. இசையுடன் கூடிய பாட்டா என்றால் ஆம் என்றுதான் கூறவேண்டும். ஆனால், அந்த இசை பண்பட்டதல்ல. இசையிலக்கண விதிகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்டதல்ல. என்றாலும் உள்ளத்தைத் தொடும் அம்சம் அதில் இல்லாமலில்லை. சூது வாது தெரியாத ஒருவனுடைய வெளிப்படையான பேச்சிலே இருக்கும் கவர்ச்சி அதிலே இருக்கிறது. உள்ளத்தில் அது நேராகப் படுகிறது,
பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/6
Appearance