6
காற்றில் வந்த கவிதை
எளிமையிலே ஒர் இன்பம். வெள்ளைச் சொல்லிலே ஒரு கவர்ச்சி. தெம்மாங்கு இசையிலே ஒரு குழைவு.
அந்தப் பாடலை யார் எழுதினர்கள்? யார் அதற்கு இசை அமைத்தார்கள்? எந்தக் காலத்திலே அது தோன்றி யது: எந்தச் சுவடியிலே அது இடம் பெற்றிருக்கிறது. யாருக்குமே தெரியாது.
வெள்ளை நெஞ்சம் ஒன்று தனது துடிப்பை என்ருே எப்படியோ பாட்டாக வெளியிட்டது. கலைச் சிறப்பை எல்லாம் எண்ணிப் பார்த்துக்கொண்டு அது தன் துடிப்பை வெளியிட முயலவில்லை. உள்ளத்திலே உணர்ச்சிபொங்கியது. அது பாட்டாக வெளியாகியது. அவ்வளவுதான். அது வெளி யாகும்போதே இசை வடிவத்தையும் கொண்டிருந்தது. அந்த இசை சேரும்போதுதான் அதன் உணர்ச்சி முழுவதும் வெளிப்படுவதுபோலப் பட்டது. அதனல் அதுவும் மலரும் மணமும்போலச் சேர்ந்தே பிறந்திருக்கிறது.
பாடிய நெஞ்சம் அந்தப் பாட்டிலே இன்பம் பெற்றது: அமைதியும் பெற்றது.
பிறகு எத்தனையோபேர் அதைப் பாடினர்கள். ஊரெல் லாம் பாடினர்கள். சென்ற இடமெல்லாம் பாடினர்கள்.
அந்தப் பாடல் நாடோடியாக எல்லா இடங்களிலும் பரவிவிட்டது. எங்கே தோன்றிற்று, எங்கே சென்றது என்றெல்லாம் திட்டமாகக் கூற முடியாதபடி அது காற்றிலே கலந்துவிட்டது. மக்கள் உள்ளத்திலே தங்கி விட்டது.
வேலை செய்யுமிடத்திலே அந்தப் பாடலைக் கேட்கலாம். வேலை முடிந்து ஒய்வு பெறும் இடத்திலே அதைக் கேட்கலாம். இன்பத்திலே கேட்கலாம். அப்பொழுது இன்பம் அதிகமாகிறது. துன்பத்திலே கேட்கலாம். அப்பொழுது துன்பம் தணிகிறது.