பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் . 11 என்பதைக்கூடச் சிந்திக்கத் தெரியாதவளா? இல்லை. பாசிக்குட்டையே பத்திரம்; இதுவே எழில் மாளிகை. கல்வி, சமத்துவம் என்று வெளி உலகை எட்டிப் பார்த்தாலும், இதன் நிழலில் பணிந்து நிற்பதே மோட்ச சாம்ராச்சியம் என்று அவளுக்கு நாள்தோறும் பல்வேறு சாதனங்கள் உள்ளுணர்வில் போதனை ஏற்றிக்கொண்டிருக்கிறது. அந்நாள் நீதிநெறிக் கதைகள், புராணங்கள் அவள் அறிவைச் சுயமலர்ச்சியும் இயற்கையான மேன்மைகளும் பெற இயலாமல் போதனை ஏற்றின. முதியோர் வாய்மொழியாக, ஆனைகளாக, செயல்முறைகளாக அவளுக்கு உருவேற்றின. இந்நாள் பெண் கல்வி பெற்றிருக்கிறாள். எனவே, இதே போதனைகளை, உருவேற்றல்களை, நவீனமான சாதனங்கள் செய்துகொண்டிருக்கின்றன. பத்திரிகைகள், திரைப்படங்கள், தொலைக்காட்சி சாதனங்கள், மிகவும் வலிமையுடன், மிகவும் மென்மையுடன் பெண்களையே குறிப்பாக்கி அதே உருவேற்றல்களை வெற்றிகரமாகச் செலுத்திக்கொண் டிருக்கின்றன. எனவே, இந்தப் பாசிக்குட்டையைத் துழாவுவது அவசியம் என்று படுகிறது. ஆணும் பெண்ணும் சமமாகப் பிறந்த மனிதப் பிறவிகளாக இருக்கையில் இவள் மட்டும் எப்படித் தன்னைச் சுற்றி ஒரு பாசிக்குட்டையை வளரவிட அனுமதித்து, அதனின்றும் விடுபடாமல், விடுபட இயலாமல் விடுபடும் எண்ணமே தேவையில்லை என்று பின்னடைந்து அறிவில்லாத சதைவடிவம் என்று தன்னை முடக்கிக்கொண்டாள் என்று பார்க்க வேண்டும். வரலாற்று உண்மைகளை அறிவார்ந்து-ஆழ்ந்து துருவிப் பார்க்க வேண்டும். வரலாற்றுச் சிதிலங்கள், புராணப் பாசிகளில், உருவிழந்த மொத்தைகளாகப் போயிருக்கின்றன. ஆராய்ந்த அறிவியலார் ஏற்கனவே கண்ட சான்றுகள், இந்த நமது பக்கப் பார்வைக்கு உதவுமா என்பது ஐயம்.