பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 காலந்தோறும் பெண் அவளைக் காட்சிப் பொருளாக்கியதில்லை. அந்தக் காலத்தில் அவள் எந்த உரிமையைப் பற்றியும் எந்த உணர்வும் இல்லாத வெறும் சடப்பொருள். கல்வி, அறிவு கிடையாது. கூண்டுக்குள் குருடாக்கி வளர்க்கப்பட்ட கிளி. பெண் பூப்பெய்திய பின்னரே திருமணம்; அதுவும் பிள்ளை வீட்டார் வந்து கேட்க வேண்டும் என்ற மரபுடைய சமுதாயங்களிலும் இத்தகைய பெண் பார்க்கும் படலம் இருந்தாலும், இன்றைய இழிநிலை இருந்ததில்லை. பெண் ஆளான நாளிலிருந்தே வெளி உலகுக்கும் அவளுக்கும் இடையே திரை விழுந்துவிடும். பெண் கேட்டு வரும் இடங்களில் இருந்து பெண் மக்களே பரிசோதனைக்கு வருவார்கள். அநேகமாக இத்தகைய சமுதாயங்களில் ஆணே தேடி வந்து பரிசம் போட்டு மணந்து கொள்ளும் முறை இருந்ததால், பெண்ணுக்குக் கடுகளவும் மதிப்பு இல்லாமல் போய்விடவில்லை. இன்றோ, நாகரிகம் வந்த நிலையில், சாதி மரபுகள் கட்டுப்பாடுகள் அநேகமாகத் தகர்ந்து, பூப்பெய்திய பின்னரே திருமணம் என்ற வழக்கு வந்துவிட்டது. திரைக்குப் பின் பெண்கள் கட்டிப் போடப்படுவதில்லை; பள்ளி, கல்லூரி என்று கல்வி பெறுவதும், பொது இடங்களில் பணியாற்றச் செல்வதும், பொருளாதாரம் சார்ந்து தன் காலால் நிற்கக் கூடிய நிலையை எய்தியிருப்பதும், கண்கூடு. அதுவுமின்றி, வயதுவந்த ஆணும் பெண்ணும் கலந்து பழகும் சந்தர்ப்பங்கள் பல இருக்கும் நிலையில், தாமாக ஒருவரை ஒருவர் விரும்பி மணம் செய்துகொள்ளும் அளவுக்கு முன்னேறி இருப்பதையும் பார்க்கிறோம். ஆனால் இந்தக் கட்டத்தில்தான் பெண்ணின் சுதந்திர நிலை பளிச்சென்ற ஒளியில் விழும் கருநிழலாக அவள் மதிப்பு அழுத்தமாகப் புலப்படுகிறது. வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கதைகள், நாடகங்களில் சினிமாக்களில் அளவு மீறிப் பழகும் காதலர்களைக் காட்டுவார்கள். வயதுவந்த பின், பொருளாதார சுதந்திரம்