பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 காலந்தோறும் பெண் பிறவி எடுக்கும்போது, இரு பாலருக்கும் பொதுவாகவே சித்தம், அறிவு என்று சொல்லக்கூடிய மலரும் கூறுகள் அமைந்திருக்கின்றன. இருவரும் ஒருவருக்கொருவர் என்ற நிலையில், ஒரே சமமான, இரு பாதிகளாக இல்லாவிட்டாலும், இருவரும் இணைந்த சேர்க்கையே முற்றிலும் நிறைவான முழுமையாகப் படைக்கப்பட்டிருக்கின்றனர். மிகவும் புராதனமான இந்திய சமயம் சார்ந்த கருத்துப்படி படைப்புக் கடவுள் தாமே இரு பகுதிகளாகப் பிரிந்து ஆணென்றும் பெண்ணென்றும் சக்திகளைத் தோற்றுவித்தார் என்றும், இவரே ஆதி ஸ்வயம்புவன் என்றும் மனைவி சத்ரூபி என்றும் பெயர் பெற்றனர் என்றும் புராணம் கூறுகிறது. இந்தக் கோட்பாட்டின்படியே ஒருவருக்கு மற்றவர் அடக்கம் என்ற குறிப்பு நிச்சயமாக இல்லை. மனிதகுல வரலாற்றின் வழி நோக்குங்கால், தங்கள் இனத்தை ஏனைய கொடிய விலங்குகளின் தாக்குதலினின்று காப்பர்ற்றிக் கொள்ளவும், இயற்கையின் கொடிய விளைவுகளில் இருந்து தப்பவும், மனிதர் ஆதியிலிருந்தே இணைந்த குழுக்களாகத்தான் திரிந்தனர். உணர்ச்சி வெளியீடுகளின் விலங்குத்தனமான வெளிப்பாடுகள், ஒலிக்குறிகளாக, மொழியாக மலர்ந்தது. குத்திக் கிழித்துக் கொலை செய்யும் விலங்குத்தன்மையிலிருந்து படிப்படியாக மென்மையான இயல்புகளுக்கு மெருகடைந்தனர். அந்த ஆதி நாட்களில், மனித இனக் குழந்தைகளின் தலைவியாக, தாயே முதன்மை பெற்றிருந்தாள். குழுமக்கள் அத்தாயின் பெயராலேயே வழங்கப்பெற்றிருந்தனர். ஒரே குழுவுக்குள் கலந்து இனம் பெருக்கிய நிலை மாற, வெவ்வேறு குழுக்களின் ஆண் பெண் இணைந்து சந்ததி பெருக்கும் முறை வந்த பின்னரும், புதிய இனக்குழுக்கள் தாய் வழியே அறியப்பட்டன.