பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ծ0 * காலந்தோறும் பெண் இயங்கிவந்து காலத்து, மக்களிடையே வருணபேதங்கள் ஆழ்ந்து பிரிவுபடுத்தியிருக்கவில்லை. வேள்விக்கும் வேதத்துக்கும் முதன்மையாக நின்ற குலத்துக்கன்னியர், தோள்வலிமையினால் சமுதாய நலன் காத்த வீரரை மணந்தார்கள். அவ்வாறே வீரர் குலத்து மங்கையர் முனிகுமாரர்களுக்கு மனைவியாவதில் தடையேதும் இருந்ததில்லை. உபநயனம் ருக்வேத ஆசியருக்கு மட்டுமே உரிய சடங்காகவும், அறிவும் ஞானமும் அவர்களுக்கே உரித்தான செல்வங்களாகவும் கருதப் பெற்றிருக்கவில்லை. தொன்மையான ஆரிய சமுதாயத்தில் எல்லாப் பிரிவு மக்களுக்கும் பெண்களுக்கும் உபநயனம் இன்றியமையாத சடங்கென்றுதான் கருதப்பட்டது. உபநயனச் சடங்கின் விதிமுறைகளில் ஊமையருக்குச் செய்வதற்குரிய முறைகளும் காணப்படுகின்றன. ஆசானே மந்திரங்களை உச்சரித்துக் கற்பிக்கும் முறை விவரிக்கப் பெற்றிருக்கிறது. வீரியமற்றோர், குருடர், வலிப்பு முதலிய நோயினால் பீடிக்கப் பெற்றோர் யாராக இருந்தாலும் உபநயனம் அவருக்கு விலக்கானது அல்ல. மேலும் பாரத நாட்டில் அப்போது வாழ்ந்த நாகரீகமற்ற வேடர், மற்றும் மலை, வனங்களில் வாழ்ந்த பல்வேறு இன மக்களும் உபநயனச் சடங்கு விரும்பினால் மேற்கொண்டு ஆரிய சமுதாயத்தில் இணைவதற்குரிய விதிமுறைகளும் நெறிப்படுத்தப் பட்டிருக் கின்றன. 'விராட்ய ஸ்தோமம்’ என்ற சடங்கினால் அவர்கள் புனிதமாக்கப் பெற்று உபநயனம் பெறுவதற்குரிய தகுதியை அடைந்தார்கள். சமுதாயத்தில் மானிடராகப் பிறக்கும் ஒவ்வொருவரும் தத்தம் அறிவைத் துலக்கிக் கொண்டு மேன்மை பெறவும், ஈனமற்ற தொழில் புரிந்து நல்வாழ்வு வாழ்வதற்குரிய அடிப்படை உரிமை உபநயனம் மறுக்கப்படும்போது, பறிக்கப் பெறுகிறது.