பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

காலமும் கவிஞர்களும்


 வார்ப்பது நாம் நினைப்பது போலவே அவ்வளவு எளிதல்ல; உயிரொளி வீசும் கவிதா சக்தியைப் பெற்ற பெரிய கவிஞர்களால்தான் அவ்வாறு செய்ய முடியும். விவிலியத்தில்,காணப்பெறும் சாத்தானின் வீழ்ச்சியைக் குறித்து அழியாப் புகழுடன் விளங்கும் சுவர்க்க நீக்கம் போன்ற காப்பியப் படைப்பும் மேனாட்டு வரலாற்று நூல்களில் காணக்கிடக்கும் ஒரு சில செய்திகளைக் கொண்டு ஜூலியஸ் சீஸர், நாலாம் ஹென்றி, ஐந்தாம் ஹென்றி, இரண்டம் ரிச்சார்டு போன்ற இறவாத புகழுடைய நாடக இலக்கியங்களின் படைப்பும் ஒப்புயர்வற்ற ஒரு மில்டன், ஒரு ஷேக்ஸ்பியர் போன்ற பெருங் கவிஞர்களால்தான் ஆக்க முடியும். அது போலவே, பாரதியின் படைப்பும் கவிதைச் சுவையுடனும், நாடகப் பண்புகளுடனும், புதிய கருத்துக்களுடனும் இலங்குகின்றது. சுமார் இரண்டாயிரத்து ஐந்நூற்றுக்கு மேற்பட்ட வரிகளையுடைய பாஞ்சாலி சபதம் காப்பியப் படைப்பில் பாரதியின் சிறந்த வெற்றியென்று சொல்வது எள்ளளவும் மிகையாகாது. பாரதியின் ‘பாஞ்சாலி சபதம்’ ஒரு காப்பியமாகுமா? காப்பியத்திற்குரிய இலக்கணம் இதற்குப் பொருந்துகின்றதா? எந்தெந்த முறைகளில் பாரதி தன் திறமையைக் காட்டுகின்றான்? என்பன போன்ற செய்திகளை ஈண்டு ஆராய்வோம். நமது மொழிக்குரிய பெருங்காப்பிய இலக்கணத்தையும் மேனாட்டார் காப்பியங்களைப் பற்றிக் கூறும் சில கருத்துக்களையும் முன் நிறுத்தி ஆராயத் தொடங்குவோம். பெருங்காப்பிய இலக்கணத்தைக் கூறும் தண்டியலங்காரம்,

“பெருங்காப் பியநிலை பேசுங் காலை
வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றினொன்(று)
ஏற்புடைத் தாகி முன்வர இயன்று -
நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித்