பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
vị

'காலமும் கவிஞர்களும்’ என்ற இச் சிறு நூல் பன்னிரண்டு கட்டுரைகளின் தொகுப்பு. இவை 'குமரிமலர்' 'அமுத சுரபி","ஜனநாயகம்', 'கலைமகள் , தமிழ்நாடு ஆகியவற்றின் மலர்களில் வெளிவந்தவை.நான்கு கட்டுரைகள் வானெலிப் பேச்சுக்களுக்காகித் திரட்டப்பெற்ற குறிப்புக்களிலிருந்து எழுதப்பெற்று 'குமரி மலரிலும்’, ஜனநாயகத்திலும் வெளி வந்தவை. கட்டுரைகளைப் பதிப்பித்துக்கொள்ள இசைவு தந்த மேற்குறிப்பிட்ட இதழ்களாசிரியர்கட்கு என் இதயம் நிறைந்த நன்றி.

இக்கட்டுரைகள் கல்லூரி மாணாக்கர்கட்கு ஏற்றவையாக இருக்கக்கூடும் என்று எண்ணி அவற்றைத் தொகுத்து இச்சிறு நூலாக வெளியிடுகின்றேன். அறிஞருலகமும் தமிழ் கூறு நல்லுலகமும் இதனை ஏற்றுத் தக்க முறையில் பயன்படுத்திக்கொள்ளும் என்று நம்புகின்றேன்.

இந்நூலுக்குத் தக்கதொரு முன்னுரை பெறவேண்டும் என்று எண்ணி என் அரிய நண்பரும் எங்கள் கல்லூரி முதல்வருமான திரு. ப. துரைக்கண்ணு முதலியார் அவர்களை அண்மி முன்னுரை வழங்கி ஆசி கூறுமாறு வேண்டினேன். அவர்களும் மனமுவந்து அரியதொரு முன்னுரையை அளித்தார்கள். திரு. முதலியார் அவர்களே அறியாத ஆசிரியர் உலகமும் இல்லை, மாணாக்கர் உலகமும் இல்லை. கிட்டத்தட்ட முப்பதாண்டுகளாகக் கல்வித்துறையில் பணியாற்றி வரும் பெரியார் இவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் நல்ல சொல்வன்மை பெற்றவர். வகுப்பறைகளிலும் சரி, பேச்சு மேடைகளிலும் சரி, கருத்துச் செறிவுடன் கேட்டார்ப்பிணிக்குத் தகையவாய்க் கேளாரும் வேட்கும் வண்ணம் சுவை படப் பேசும் திறமை வாய்ந்தவர். தமிழ் நாட்டில் தமிழ் எம். ஏ., பட்டதாரிகளுள் முதன்முதலாகக் கல்லூரி முதல்வராக வந்தவர். இத்தகைய பேரறிஞரைக் கல்லூரிக்கு முதல்வராக ஆக்கியதன்மூலம் தமிழ் நாட்டிற்கே எங்கள் வள்ளல் அழகப்பர் அவர்கள் வழிகாட்டியுள்ளார் என்று கூறின், அது சிறிதும் மிகையன்று. இத்தகைய பெரியார் இந்நூலுக்கு முன்னுரை அளித்து ஆசி கூறினமைக்கு என் இதயம் கனிந்த நன்றி.