பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95 கால்டுவெல்

1607 வரை வாழ்ந்து பேரளவிற்கு ஆட்சிப்புரிந்தார்கள் என்பதை அறிந்துள்ளோம். ஆனால், இக்காலத்தில் நாயக்கர்களும் ஆட்சியில் இருந்து வந்துள்ளார்கள். வடமொழியில் ‘நாயகா’ என்பது தலைவனைக் குறிக்கும் சொல். ஆனால், தென்னிந்தியாவில் அதே பெயர் தெலுங்கு சாதியாரைக் குறிக்கும் பரம்பரைப் பெயராகப் பயன்பட்டு வந்தது. தெலுங்கில் ‘நாயுடு’ என்பதும் தமிழில் ‘நாயக்கன்’ என்பதும் ஆண்பால் ஒருமைப் பெயராக வழங்கப்பட்டு வந்தன. ‘நாயனார்’, ‘நாயர்'என்ற சொற்களும் ஒப்புநோக்கத் தக்கன. நாயக்கர்களுள் பல பிரிவுகள் இருந்தன. மதுரை அரசர் பரம்பரையைச் சேர்த்த சாதிப் பிரிவினர்களான வடுகநாயக்கர்கள், சாதாரணமாக வடுகர்கள் அதாவது, படகர்களைப் காப்பாற்றுபவர்கள் என்று வழங்கப்படுவார்கள். மதுரை நாயக்க அரசர்கள் பொதுவாகத் தமிழ்நாட்டிலும் சிறப்பாகத் தென்பகுதியிலும் ‘கர்த்தர்கள்’ என்று வழங்கப்பட்டார்கள். மக்கள் இந்தக் கர்த்தர்கள் காலத்தில் இன்ன இன்ன நிகழ்ந்தன என்று கூறுகிறார்கள். கர்த்தர்கள் என்ற தமிழ்ச் சொல் ‘செய்பவன்’, ‘பிரதிநிதி’ என்ற பொருள்களைக் குறிக்கும் வட சொல்லாகிய கர்த்தர் என்பதன் பன்மை, இவ்விருது ‘அரசன்’ என்ற விருதைவிடக் குறைந்த மதிப்புடையது என்றாலும், ‘நாயகா’ என்ற சாதாரண சாதி விருதை விடக் கர்த்தர்கள் என்ற விருது அரசுக்குரிய பெருமையைப் புலப்படுத்தத் தகுதியுள்ளதாயிருக்கிறது. கர்த்தா என்ற விருதிற்கு இவ்விடத்தில் உரிய சிறந்த பொருள் ‘உயர்தர விசாரணை அதிகாரி’ என்பது.

நாயக்கர் ஆட்சியின் சிறப்புகள்

பாண்டிய சோழ அரசர்களைப் பற்றி அறியக்கூடிய செய்திகளைவிட அதிகமான செய்திகள் நாயக்க அரசர், அவர்களைப் பற்றிய அரசாட்சி, வேறு சிறப்புகள் இவைகளைப் பற்றியும் அறியக் கிடைப்பது நம் நல்வினையே ஆகும். பாண்டியர்களும் சோழர்களும் தங்கள் காலத்து ஆட்சியைப் பற்றி ஒரு சில - ஏன் - எந்தவிதமான உறுதியான குறிப்புகளையும் விட்டுச் செல்லவில்லை. ஆகையால், சோழ பாண்டியர்கள் நீதி வழுவா முறையில் சிறப்புடன் ஆட்சி செய்திருக்க வேண்டும் என்பது நாம் உய்த்துணர வேண்டியிருக்கிறது. அவர்கள் வாழ்ந்த காலம் புலவர்பாடும் புகழமைந்த காலமாய்ப் பொலிவுற்றிருந்தது. அப்புலவர்கள் அக்காலத்தைப் பற்றிக் குறைந்த வரிகள் விதிக்கப்பட்ட பொன்னான காலம் என்றும் அடக்குமுறைக் கொடுங்கோன்மையற்ற காலம் என்றும், மாதம் மும்மாரி பெய்த காலம் என்றும், எங்கும் இன்பம் நிரம்பிய காலம் என்றும் வருணித்துள்ளார்கள். ஆனால், நாயக்க அரசர்கள் அரசோச்சிய அப்பழைய நாள்களில்