பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

123 கால்டுவெல்


அனைத்தும் மிக அழகான தோற்றமுடையனவாயிருந்தன. ஆனால், அவற்றைப் பார்க்க வந்தவன் கரையில் இறங்கியவுடனே எல்லா அழகும் மறைந்துவிடும். அதிகமாகப் படல்களாலாகிய வீடுகளே நிறைந்த ஒரு பெரிய நகரத்தைத் தவிர அங்கு வேறு எதையும் பார்க்க இயலாது. டச்சுக்காரர் தூத்துக்குடியிலிருந்து போதுமான வரிவசூல் செய்து வந்தனர். முழு முத்துக்குளித்தல் கடற்கரையும் பாதி மதுரை அரசருக்கும் மற்றவை மறவர் இளவரசனுக்கும் உரிமையாயிருந்தன. இம்மறவ நாட்டு இளவரசன் மதுரை அரசனுக்குக் கப்பம் கட்டுபவன். ஆனால் அவன் விரைவிலேயே மதுரை அரசனை வேரோடு அசைத்து ஆட்டங்காணச் செய்துவிட்டான். சில ஆண்டுகளுக்குப் பிறகு முத்துக் குளித்தல் கரையின் முழு உரிமையையும் அதைச் சார்ந்த நாடுகளின் அதிகாரத்தையும் விலைபேசி வாங்க டச்சுக்காரர்கள் முயன்றார்கள். இக்காரணத்தால் டச்சுக்காரர்கள் மறவ நாட்டரசரிடம் மிக அழகிய பரிசுகளுடன் ஒரு திறமையுள்ள தூதுவரை அனுப்பி வைத்தார்கள்.

இளவரசரோ பரிசுகளைப் பெற்றுக் கொள்வதே தகுதியானது என்று ஏற்றுக் கொண்டு, பல கருத்துகளுக்கு வாக்களித்தார். ஆனால், அவர் வாக்குப்படி நடந்து கொள்ள வில்லை.

அதற்குள் டச்சுக்காரர்கள் மதுரை அரசரிடமிருந்து திருநெல்வேலிக் கடற்கரை முத்துக்குளிப்பிடங்களின் அதிகாரங்களைப் பெற்றுவிட்டார்கள். அதனால், முத்துக்குளிக்க அனுமதிபெறும் கட்டண வருமானத்தில் அவர்களுக்குப் போதுமான வருமானம் வந்தது. முத்துக்குளிக்க விண்ணப்பிக்கும் ஒவ்வொருவருக்கும் தலைக்கு அறுபது எகுகள் (இதை எழுதிய ஆசிரியர் பிரஞ்சுக்காரரானதால், அக்காலத்தில் வழக்கிலிருந்த பிரஞ்சு நாணயத்திலேயே மதிப்பைக் குறிப்பிடுகிறார். எகு என்பது ஐந்து பிராங்குகள் மதிப்புள்ளது. இக்காலத்தில் அந்த நாணயம் வழக்கற்று விட்டது) வரிவிதிக்கப்பட்டிருந்தது. சில சமசமயங்களில் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு படகிற்கும் அதிகப்படியான வரி விதிப்பதும் உண்டு. இவ்வாறு அனுமதி பெற்ற மரக்கலங்கள் அறுநூறு அல்லது எழுநூறாயிருக்கும். சங்கு, சிப்பி எடுத்தலும் அதே முத்துக்குளிக்கும் வரையறைக்குட்பட்டிருந்தது. இதனாலும் நல்ல லாபம் கிடைத்தது. மதுரையில் நெய்யப்பட்ட துணிகளை வாங்கிக் கொண்டு அவற்றிற்குப் பதிலாக ஜப்பான், தோல், மொலுகா வாசனைத் திரவியங்களைக் கொடுத்துச் சாதாரணமாக வாணிபம் செய்வார்கள். இந்தக் குறிப்புகளெல்லாம் கிடைக்கின்ற கடிதங்களை எழுதியிருக்கும் கிறிஸ்தவ மத போதகர்கள், 1700 இல் டச்சுக்காரர்கள் எந்த முறையில்