பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5 கால்டுவெல்

பேசப்பட்டு வந்த நிலப்பகுதியின் தென் எல்லையாகக் கன்னியாகுமரி தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது. மேலும், தெற்கே கடலானதால், தமிழ்நில எல்லை இன்னும் தெற்கே அதிகமாகப் பரவியிருக்க இயலாது. ஆனால், நாஞ்சில் நாட்டின் கல்வெட்டுகளிலிருந்து நான் அறிந்த வரையில் தமிழே இங்குப் பேசப்பட்டு வந்தது.

திருநெல்வேலியின் பழங்குடிமக்கள்

திருநெல்வேலிப் பழங்குடி மக்களைப் பற்றி இதுவரை ஒன்றும் தெரியவில்லை. அவர்கள் யாராயிருந்தபோதிலும் ஆரியர்களாக மட்டும் இருந்திருக்க முடியாது. மலையாளத்தில் தலையரசர்கள் (மலை ராஜாக்கள்) என்றும், தமிழில் காணிக்காரர்கள் (பரம்பரையான நில உரிமையாளர்கள்) என்றும் வழங்கப்படும் மலைவாசிகள் நீலகிரி மலையிலுள்ள தோடர்களைப் போன்று சமவெளிப் பகுதியின் பழங்குடி மக்கள் வழிவந்தவர்களல்ல. ஆனால், அவர்கள் பழனி மலையிலுள்ள மலைவகுப்பினரைப் போன்று பின்னாள்களில் தமிழராக்கப்பட்ட தாழ்ந்த சமவெளிப்பகுதி மக்களின் வழியினரென்பது தெரிகிறது. அவர்கள் பகைவர்களால் மலைப்பகுதிக்குத் துரத்தப்பட்டிருக்க வேண்டும்; அல்லது உரிமையாகவே அப்பகுதியிலிருந்து குடியேறியிருக்க வேண்டும். மேலும், பழங்குடிகள் புதியவர்களாய்க் குடியேறியவர்களுடன் இரண்டரக் கலந்துவிட்டமையால், இப்பொழுது அவர்களைப் பிரித்துக் காண்பது அரிதாயுள்ளது. ஓரளவு இப்பொழுது பழங்குடிகளின் சிறந்த பிரதிநிதிகளாகக் கருதப்படக் கூடியவர்கள் நெடுங்காலம் வருத்தப்பட்டுவரும் சமுதாய நிலையில் மிகத் தாழ்த்தப்பட்டவர்களாகிய பறையர்களும் பள்ளர்களும் ஆவார்கள். பிறநாட்டின் பல பகுதிகளிலிருந்து குடியேறிய சாதியினரைப் பற்றிய போற்றத்தக்க பெருமைவாய்ந்த செவிவழி வந்த கதைகளையும் நாம் அவ்வப்போது கேட்கலாம். சான்றாக, பிராமணர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்ற செய்தியில் சிறிதும் ஐயமில்லை. நாயக்கர்களும், மற்ற தெலுங்கு சாதியினர்களும் வடக்கிலிருந்து வந்தவர்களே என்பதிலும் ஐயமில்லை. பொதுவாக வேளாளர்கள் சோழநாட்டிலிருந்தும் மறவர்கள் இராமநாதபுரத்திலிருந்தும், சாணார்கள் (சான்றோர்கள் - ந.ச.) இலங்கையிலிருந்தும் வந்தவர்கள் என்பது கருதப்படுகிறது. இத்தகைய கதைகள் மக்கள் இனநூலுக்குரிய உண்மைச் செய்திகளல்ல என்பது உண்மை. ஆனால், பள்ளர்களும் பறையர்களும் நாட்டிற்குள் குடிவந்தவர்கள் என்ற செவிவழிக் கதை எக்காலத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்க உண்மையாகும்.