பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 284


விடுதலை செய்யப்பட்டான் என்பதை உணர்த்தி, கிளார்க்கின் மனைவி மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான பணத்தைச் செலுத்துவதற்கான ஒரு வழியை அவனுடன் பேசி ஒழுங்கு செய்து கொள்ள வேண்டும் என்றும், அரசின் ஆட்சியில் அவன் துய்த்து மகிழும் பெரும்பாதுகாப்பு நன்மைகளைச் சுட்டிக் காட்டவேண்டுமென்றும், சூழ்நிலை சான்றுகள் அவனுக்கு மிக எதிராக இருந்தபோதும் கூட நடுநிலையாக விருப்பு வெறுப்பின்றி அவனுடைய குற்றத்தை ஆராய்ந்தறிந்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டமையால் அவன் கம்பெனியாரின் ஆணைகளுக்கு உடனுக்குடன் பணிந்து இருக்க வேண்டிய தேவையையும், அதனாலேற்படக் கூடிய நன்மைகளையும் எடுத்துச் சொல்லி அறிவுரைப் பகர்ந்து இறுதியாக அவனுடைய பாளையத்தின் முழு உரிமையையும், முழு உடைமையையும் அவனிடம் திருப்பித்தர வேண்டுமென, அரசாங்கம் அறிவித்தது.

அரசே அமைத்த கண்ணியம் மிகுந்த அக்குழுவின் தீர்ப்புப்படி பாளையக்காரனை விடுதலை செய்வதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை. ஒருவேளை பாளையக்காரனின் செய்கை தொடர்ந்து ஓரளவு நேர்மையும் கடமையும் நிரம்பியதாக இருந்திருந்தால், ஜாக்சன் தவறிழைத்துவிட்டார் என்றும், குழுவின் தீர்ப்பு சரியானதென்றும் கொள்ளலாம். ஆனால் ஜாக்சனுக்குப் பின்வந்த லூவிங்டனிடம், அவனுடைய நட்புரிமையை (ஓ! ஓ! அதற்குப் பெயர் அப்படியா? - ந.ச.) அறியாது, பாளையக்காரன் காட்டிய எதிர்ப்பு ஜாக்சனின் எண்ணம், அரசியல் திறம் ஆகியவை நேர்மையானதே என்று எண்ண ஏதுவாகிறது. எட்டயபுர சமீன்தாரியின் உள்நாட்டு வரலாற்று ஆசிரியர் (ஆமாம்! அவர் யார்? - ந.ச.) ஜாக்சனின் நோக்கத்தையே ஏற்றுக் கொண்டு, தளபதி கிளார்க்கு கட்டபொம்ம நாயக்கனாலேயே கொல்லப்பட்டான் என்று குறிப்பிடுகிறார். விசாரணைக் குழுவின் தீர்ப்பு பாளையக்காரனின் திறமைமிக்க ஏய்ப்பு என்று அவர் பகர்கின்றார். எனினும் எட்டயபுரக் குடும்பத்தார் பாஞ்சாலங்குறிச்சிக்கு முதல் பகைவர் என்பதையும், அவர்களே கட்டபொம்மனின் வீழ்ச்சியால் முதலில் பயன்பெறுபவர்கள் என்பதையும் நாம் நினைவு கூர்தல் வேண்டும். (இந்த இடம் உண்மையிலேயே கால்டுவெல் நடுநிலை ஆராய்ச்சியிலும் ஈடுபாடுடையவர் என்பதற்கு நற்சான்று. - ந.ச.)

ஜாக்சனுக்கு அவசரப்புத்தி இருந்ததாகத் தோன்றுகிறது. வரி வசூல் வாரியம் பல காரணங்களுக்காக அவனைத் தண்டித்தது. எனினும் அவன் காட்டிய கீழ்படியாமை தன்மைக்காகவே அரசு அவனை வேலையிலிருந்து நீக்கியது. பண மோசடி குற்றமும் அவன்மேல் சாட்டப்