பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 22


அவனைச் சார்ந்த வீரர் கூட்டமும் இலங்கைக்கு வந்திருக்க வேண்டும். இந்நிகழ்ச்சிக்கு முன்பே பாண்டிய அரசு விளக்கம் பெற்றிருந்திருக்க வேண்டும் என்பதே பழைமையான சிங்களவர் கொண்டிருந்த நம்பிக்கை என்பது தெரிகிறது. இதனால், ஆரிய நாகரிகம் பாண்டி நாட்டில் அல்லது கொற்கையில் முதன்முதல் பரவிய காலம் மிகப் பழைய காலம் என்பது தெரிகிறது. இது ஏறக்குறைய கி.மு.700 என்று நாம் கூறலாம். தாய்நாட்டிலிருந்து இலங்கை பழைய காலத்தில் அடிக்கடி தமிழர்களால் படையெடுக்கப்பட்டு வந்தது. படையெடுத்து வந்தவர்கள் பொதுவாகப் பாண்டியர்கள் அல்லர்; சோழர்களே என்பது தெரிகிறது.

இராமாயணத்தில் திருநெல்வேலி

இராமாயணத்தில் திருநெல்வேலியிலுள்ள இடமென்று சொல்லப்படும் ஒரே இடம் மகேந்திரம். இது ‘மகேந்திரகிரி’ என்று இந்தியர்களால் சாதாரணமாக வழங்கப்படுகிறது. மலைத்தொடரின் தென்கோடிப் பகுதியின் மிக உயர்ந்த மலையாகிய இம்மகேந்திரகிரி, அகஸ்தியர் மலைக்குத் தெற்கிலுள்ளது. ஆனால், இது சம்பந்தமாக வழங்கப்பட்ட கதை, வானரக் கடவுளாகிய அனுமான் இலங்கைக்குத் தாவியது இந்த இடத்திலிருந்துதான் என்பதைக் குறிக்கிறது. பூகோள வரையறையின்படி குறிப்பிட்ட இடங்களைக் காண்பது இயலாத செயல்.

பாண்டியர்களைப் பற்றிய கிரேக்கக் குறிப்புகள்

மகா அலெக்சாண்டருக்குப் பின் பட்டத்திற்கு வந்த செலுக்கஸ் நிகேட்டர் என்பவரின் அரசியல் தூதுவராக இக்காலப் பாட்னாவிற்கு அருகிலுள்ள பாடலிபுத்திரம் என்னுமிடத்தில் பிராசி (பிரஷிய அல்லது கிழக்கத்திய) என்ற நாட்டின் அரசனாகிய சந்திரகோட்டல் (சந்திரகுப்தன்) என்பவனுடைய அரசவைக்குச் சுமார் கி.மு.302ல் வந்தார். அவர் இந்தியாவிலுள்ள ஒரு நாடாகிய பாண்டைய (Pandaia) என்பதைப் பற்றி எழுதியிருக்கிறார். இந்த நாடு இந்திய ஹெர்குலிஸ் என்னும் கிருஷ்ணன் மகன் பெயரால் இப்பெயர் பெற்றது என்று கூறுகிறார். அவருக்கு இச்செய்தியைத் தெரிவித்தவர்கள் பாண்டியர்களை நினைத்தே கூறியிருக்கின்றார்கள் என்பதில் ஐயமில்லை. கலிங்கம், ஆந்திரம் பற்றிக் கேள்விப்பட்ட ஆசிரியர் பாண்டியர்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருப்பார் என்பதில் ஐயமில்லை. தனக்குத் கூறப்பட்ட கதைகளை அவர் தவறாகப் புரிந்து கொண்டார் என்பது உண்மை. ஆனால், பாண்டி நாட்டிற்குப் பெயர் வரக்