பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

315 கால்டுவெல்

டமையால் எவ்வித முன்னேற்பாடுமின்றி - எதிர்ப்புமின்றி - கூண்டோடு கைலாசம் சென்றிருப்போம். சூழ்ச்சியின் விவரமறியாததால் சிறு சிறு படைக் கூட்டங்களை முடிந்தவரை திரட்டித் தப்பியோடிய கைதிகளைத் துரத்திச் சென்று பிடிக்கக் கட்டளையிட்டோம். ஆனால் நல்வினை வயத்தால் அவர்கள் தோல்வியுடன் திரும்பிவிட்டனர். ஏனெனில் அந்தச் சூழ்நிலையில் பாளையங்கோட்டையிலிருந்த அத்தனை சிப்பாய்களையும் சேர்த்து அனுப்பியிருந்த போதிலும் அக்கைதிகளைப் பிடிப்பதற்குப் போதுமானதாக இருந்திருக்காது. (கைதிகளைப் பிடிக்க முடியாத சிப்பாய்கள்; சிப்பாய்களால் பிடிக்க முடியாத கைதிகள்! - ந.ச) எனவே அவர்கள் நோக்கம் ஈடேறுதல் அரிதாகவே இருந்திருக்கும்.


திருநெல்வேலி மாவட்டத்தில் படைத்தலைமை அதிகாரியாயிருந்த மேஜர் மக்காலே கைதிகளைத் திரும்பப் பிடிக்க வேண்டிய முறைகளைத் திட்டமிட்டார். பாளையங்கோட்டையிலிருந்த எஞ்சிய படையுடன் கயத்தாற்றிற்குப் புறப்பட்டார். சீவலப்பேரி படையிலிருந்த நவாபின் குதிரை வீரர் சிலரையும் சேர்த்துக் கொண்டார். சங்கரநயினார் கோவில் மேஜர் ஷெப்பர்ட் தலைமையிலிருந்த துருப்புகளைக் கயத்தாற்றிற்குச் செல்லும்படி கட்டளையிட்டார். கயத்தாற்றில் எல்லாப் பாளையங்கோட்டை அதிகாரிகளும் 6 ஆம் தேதி ஒன்று கூடினர். உடனடியாகப் புறப்பட வேண்டியிருந்ததால் நவாப்பின் துருப்புகள் இந்தக் காரணத்திற்காக ஆங்கில சீமான்களால் இரவல் கொடுக்கப்பட்ட குதிரைகள் மீது அமர்ந்து புறப்பட்டனர். (என்ன அழகு! - என்ன தாராளம்! - ந.ச.) இதுவரை குழப்பங்களுக்கு இருப்பிடமாயிருந்த அந்த இடத்தில் முழு அமைதி ஏற்பட்டுவிட்டதாக எண்ணியமையால் அங்கிருந்த தென் போர் அணியைச் சேர்ந்த பழைய ஐரோப்பிய காலாட்படை வீரரும் சில குதிரைப் படை வீரர்களுடன் அப்பொழுதுதான் அகற்றப்பட்டனர். எனவே என்னுடைய படை நூறு துப்பாக்கி வீரர்களடங்கிய படை யாகக் குறைந்து விட்டது. அதில் இரண்டு இரண்டு நான்கு பவுண்டு பீரங்கிகளடங்கிய வங்காள பீரங்கிப்படை வீரர் பகுதியைத் தவிர மற்றெல்லாரும் உள்நாட்டு வீரர்களே. அப்படை பிப்ரவரி 8 ஆம் தேதி காலையில் முன்னால் சென்ற பாதி தூரத்திற்குப்பின் கயத்தாற்றிலிருந்து 19 மைல் துரத்திலுள்ள குலையநல்லூர் கிராமத்தை அடைந்தது. அப்படை சிறு பரப்புள்ள இடத்தில் கூடாரமிட்டுத்தங்கியது. எல்லாரும் அறுசுவை முழு உண்டி உண்டு மகிழத் தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது 1000 அல்லது 1200 வீரர்களடங்கிய பாளையக்காரப்படை ஒன்று வேல், ஈட்டி, வாள் முதலியவற்றை ஏந்தி எங்கள் படை வீட்டிற்கு எதிரே உள்ள குட்டிச்சுவரருகே தோன்றின. அவை வலப்புறமும் இடப்புறமும் சூழ்ந்து மூன்று பக்கங்களிலிருந்தும் ஒரேகாலத்தில்