பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35 கால்டுவெல்


பெயராகும்.இது சுமார் கி.மு.400இல் பெர்ஷியர்களிடமிருந்து எடிசியாஸ் என்பவனால் அறியப்பட்டது. இது கார்பியன் என்பதன் பகுதியான கார்பி தமிழ் மலையாளத்தில் கறிப்பு, பருப்பு, அல்லது கருவ என்ற கருவப் பட்டையின் பொதுப் பெயரோடு இணைந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை (கால்டுவெல் ஒப்பிலக்கணத்தின் முன்னுரைப் பகுதியில் ஐரோப்பிய மொழிகளில் தமிழ்ச்சொற்கள் பற்றிக் கூறியுள்ளமை காண்க. - ந.ச.).

கிரேக்கர்களின் வீரத்திற்கும் துணிவிற்கும் சான்றாக உள்ள ஒரு கதையை எடுத்துக் கூறாமல், தென்னிந்தியாவில் ஏற்பட்ட கிரேக்கர்களின் வியாபார உறவைப் பற்றிய வரலாற்றை என்னால் முடிக்க இயலாது (கால்டுவெல்லுக்குத் தான் கருத்துகளைச் சொல்வதில் அவ்வளவு ஆர்வம்! இதுவே ஆய்வாளரின் அடிப்படைப் பண்பு! - ந.ச.). மாலுமிகளின் திசை காட்டும் கருவி கண்டுபிடிக்காத காலத்தில் மரக்கலங்கள் கடற்கரையை ஒட்டியே பயணம் செய்ய வேண்டியிருந்தால், பெனிஷியர்களின் காலத்திலிருந்து ஓபிருக்குக் கடல் வழியாகச் செல்ல மூன்று ஆண்டுகளாகும். செங்கடலிலிருந்து இந்தியாவின் மேற்குக் கரைக்குப் பயணம் செய்ய இவ்வளவு கால அளவு ஆகாவிடினும், பயணம் நீண்டதாகவும் தொந்தரவுகள் நிறைந்ததாகவும் இருக்கும். நாளடைவில் ஹிப்பாலஸ் என்ற கிரேக்க மாலுமி தென்மேற்குப் பருவக்காற்று எத்தனை மாதங்களுக்குப் பலமாக ஒரே திசையில் வீசுகிறது என்பதைக் குறித்துக் கொண்டு, கொலம்பஸின் துணிவிற்குச் சமமான துணிவோடு வீசும் காற்றின் திசையிலேயே துணிந்து மரக்கலத்தைச் செலுத்தி, தான் அடைய எண்ணிய இடத்தருகே அமைந்துள்ள மேற்குக் கடற்கரையைப் பத்திரமாக அடைந்தான். கடற்பயணம் செய்ய விருப்புற்ற மற்றக் கிரேக்கர்களும் மகிழ்ச்சியோடு அவன் மேற்கோளைப் பின்பற்றினார்கள். அவனது துணிவான செயலின் நினைவாகத் தென்மேற்குப் பருவக்காற்றை ஹிப்பாலஸ் என்றே வழங்கிவந்தனர்.

தென்னிந்தியாவில் மிக அக்கறைகொண்ட கடைசிக் கிரேக்கர் கோமஸ் இண்டிகோ பிளிடஸ் என்பவர் கி.பி.535 இல் ‘கிறிஸ்டியன் டோபோகிரபி’ என்ற தனது நூலில் இலங்கையைப் பற்றியும் மலையாளக் கரை அல்லது மிளகு வரும் ‘மேல்’ என்ற பகுதியைப் பற்றியும் சுவையான செய்திகளைக் குறிப்பிடுகின்றார். ஆனால் அல்வினையால் (தீவினையால்) திருநெல்வேலி அல்லது கிழக்குக் கடற்கரை பற்றி அவர் ஒன்றும் கூறவில்லை.