பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

இவற்றின் மொழிநடையென்ன, பெயர் வினைத்திரிபுகளென்ன, மரபு வழக்குகள் என்ன, எல்லாம் முற்றிலும், தமிழே : மலையாளத்திற்கே சிறப்பான ஒன்றிரண்டு தனி வடிவங்கள் இடையில் காணப்படலாம். எனினும், இதிலிருந்து அன்றைய மலையாள நாட்டில் அரசியலார், கற்ற உயர்தர மக்கள் ஆகிய இவர்களது மொழியேனும் தமிழ் என்றும், மலையாளம் என்ற மொழி இருந்திருக்குமானால் மலைகளிலும் குன்றுகளிலும் உள்ள மக்களது திருந்தா வாய்மொழியாகவே இருந்திருக்க முடியும் என்றும் முடிவு செய்யலாம். "மதுரைப் பாண்டிய அரசர் எக்காலத்திலேனும் மலையாள நாட்டின் எப்பகுதியையேனும் ஆண்டிருப்பர் ; அதனால்தான், யூதர்களுக்கும், சிரியக் கிறித்தவர்களுக்கும் கொடுக்கப்பட்ட இப் பட்டயங்கள் தமிழில் கொடுக்கப்பட்டிருத்தல் வேண்டும்” என்று கொள்வதற்குச் சற்றேனும் இடமில்லை ; ஏனெனில், இவற்றைக் கொடுத்த அரசர் பாண்டியரல்லர்; கேரள உரிமைப் பட்டங்களும், சின்னங்களும் முற்றிலும் பெற்றுள்ள கேரள முடிமன்னரே யாவர் என்க! மலையாளக் கரையில் பாண்டியர் எங்கேனும் ஆட்சி செலுத்தியிருந்தார்கள் என்பதற்குச் சான்றுகள் உண்டானால் அவை கிரேக்க நிலவியலார் குறிப்புக்களேயாம். ஆனால், அவர்கள் குறிப்புக்களில் பாண்டியன் வென்றனவாகக் கூறப்படுபவை மலையாளக் கரையின் சில தனியிடங்களையேயன்றி வேறல்ல ; பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்திருக்கக்கூடிய இடம் ஆய்நாடு அல்லது பரலிய நாடு என்ற தென் திருவாங்கூரே யாகும். இவ்விடத்தில் அன்றுமட்டுமல்ல, இன்றும் பேசப்படும் மொழி தமிழே; மலையாளமன்று.

மேற்கூறியவற்றிலிருந்து திராவிட மொழிகள் அனைத்தினும் தமிழே பழைமை வாய்ந்தது என்பதும், இக்காலத்திராவிட மொழிகளின் வேறுபாடுகள் அனைத்திற்கும் மூல-