பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

ராபர்ட் கால்டுவெல்

தவத் தொண்டராய்த் கிகழ்ந்த மால்த் என்பாரின் மகளானரான எலிசா இவர்தம் அரிய மனைவியாராக வாய்த்தார். தமிழும் ஆங்கிலமும் பயின்று, சொல்வன்மையும் நல்லறிவும் வாய்ந்திருந்த எலிசா அம்மையார் கால்டுவெல் ஐயர் மேற்கொண்ட அருந்தொண்டுகளுக்கு உடனிருந்து உதவி புரிவாராயினர். அறிவிலும் ஒழுக்கக்கிலும் சிறந்த இவ்விருவர்களும் உயர்தரக் கல்வியும், பெண் கல்வியும் பரவுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள். இவர்கள் முயற்சியால் தூத்துக்குடியில் ஓர் ஆங்கிலக் கலாசாலை நிறுவப் பெற்றது. ஆங்கில “ஆலய நிர்மாண சங்க”த்தாரின் உதவியினாலும், வள்ளன்மை வாய்ந்த பொருளாளர் சிலர்தம் பேரீகையினாலும் அழகும் வேலைப்பாடும் அமைந்த கிறித்தவக்கோயில் ஒன்றை இடையன்குடியில் ஐயர் கட்டி முடித்தார். 1847-ஆம் ஆண்டில் அடிப்படைக் கல் நாட்டப் பெற்றுத் தொடங்கப் பெற்ற அக் கோவிற் றிருப்பணி 1880-ஆம் ஆண்டில் முடிவு பெற்றதென்றால், அத் திருப்பணியின் அருமை பெருமைகளையும் ஐயர்தம் முயற்சிச் சிறப்பினையும் விரித்துரைக்கவும் வேண்டுமோ? இடையன்குடிக்கே ஓர் அணிகலனாகவும், ஐயர்தம் ஆற்றலுக்கும் பெருமைக்கும் அழியாத சான்றாகவும் அக்கோவில் திகழ்கின்றது.

அறிவறிந்த மக்கள் மூவர், (இரு பெண்களும் ஒரு பிள்ளையும்) ஐயருக்குப் பிறந்தார்கள். இளைய மகளான லூயிசா என்பாள் மணவினை பூண்ட சில ஆண்டுகளுக்குள் இறந்தாள். பெரிய மகள், வியாத் என்னும் அறிஞரை மணந்து மனையறம் பூண்டாள். வியாத்தின் உதவி கொண்டே கால்டுவெல் ஐயர் பின்னர்க் கோடைக்கானலில் ஒரு பெரிய கோவிலைக் கட்டி முடித்தார். தம் அருமை மாமனரின் வரலாற்றைத் திறம்பெற எழுதியளிக்கும் பேறு வியாத் என்பவருக்கே வாய்த்தது.