பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராபர்ட் கால்டுவெல்

15


இனி, ஐயர் பல ஆராய்ச்சிகளி லீடுபட்டுத் தமிழ் நாட்டிற்கும் தமிழுக்கும் நற்பெயர் எய்துவித்தார். இடையன்குடியில் அமைந்திருந்த செக்கர் நிலமாகிய தேரியின் குறுமணல் இவருக்கு அளவிறந்த வியப்பை யூட்டியது. அதனைச் சிறிதளவெடுத்து வியன்னா நகர ஆராய்ச்சி நிலயத்திற்கனுப்பி வைத்தார் ; உலகில் வேறெங்குமே அத்தகைய நிறம் வாய்ந்த மணல் இல்லை என்ற ஆராய்ச்சி முடிபைப் பெற்றுப் பொருனை நாட்டிற்குப் பெருமையளித்தார். பண்டைக் தமிழகத்தின் வாணிபப் பெருமையையும், பழந்துறை யமைப்புகளையும் ஆராய்ந்து தமிழ் நாட்டின் தொன்மையும், சிறப்புங் கால்கொளச் செய்தார். தமிழிலமைந்த[1] “பிரார்த்தனை நூலை”த் திருத்தி யமைக்கும் பணியிலீடுபட்டு அதனைச் செய்து முடிக்கும் பெரும் பேற்றிற் பங்கு கொண்டார்; இடையன்குடி சேருமுன் 6000 ஆக இருந்த திருநெல்வேலிக் கோட்டக் கிறித்தவ மக்களின் தொகையை, 1,00,000 ஆகப் பெருக்கிச் சமயத் துறையிற் பெரும்பணி யாற்றினர்.

1877-ஆம் ஆண்டில் இவர் திருநெல்வேலி அத்தியட்ச குருவாக உயர்த்தப் பெற்றார். இவருடைய புகழ் மேலை நாடுகளிற் பரவினமைக்குக் காரணம் ஆங்கில மொழியில் இவர் இயற்றிய “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற அரும் பெரும் நூலேயாகும். இந்த நூல் 1856-ஆம் ஆண்டில் முதன்முதலாக வெளியிடப்பட்டது. இரண்டாம் பதிப்பு 1875-ல் வெளி வந்தது. இப்பொழுது இருப்பது மூன்ரும் பதிப்பாகும். இது கால்டுவெலின் மருமகனரான வியாத் பதிப்பித்தது. மொழிநூல் உலகிற்கு இவ்வாறு புது நெறி காட்டிய ஐயர்க்குக் கிளாஸ்கோப் பல்கலைக் கழகத்தார் “டாக்டர்” என்னும் பட்டம் அளித்தனர். இவ-


  1. The Prayer Book