உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

கால்டுவெல் ஒப்பிலக்கணம்



தெலுங்கு மக்கள் தம் மொழியினைத் தெலுகு என்றே கூறுகின்றனர். தெலுங்கு, தெலிங்க, தெய்லிங்க, தெனுகு, தெனுங்கு என்றும் அம் மொழிக்குப் பிற பெயர்கள் உண்டு. தெனுகு அல்லது தெனுங்கு என்பதே மொழிக்குரிய சரியான பெயர் என்று தெலுங்கு மொழிப் புலவர்கள் கூறுவர்; தேன் என்பதிலிருந்து பெறப்பட்டதாகக் காரணமுங் காட்டுவர். இது ஒப்பக்கூடியதன் றாயினும், சொற்போக்கும் மொழி யினிமையும் அப் பெயருக்கு ஏற்றனவாகவே காணப்படுகின்றன.

தெலுங்கு, திரிலிங்கம் என்பதன் மரூஉ எனபதாஉம் ஒன்று. இத் தொடரின் பொருள் இலிங்கங்களை யுடைய மூன்று கோயில்களை எல்லையாகக் கொண்ட நாடு என்பதே. இவ் விளக்கம் தெலுங்குப் புலவரின் நுணுக்கத் திறனைக் காட்டுகிற தென்பதில் ஐயமில்லை. குறிப்பிட்ட மூன்று கோயில்களின் பெயருடன் இப் பெயரை ஒட்ட வைப்பது நம்பத்தக்க தன்றாயினும், இலிங்கம் என்ற சொல்லுடன் இது தொடர்புடையது என்பதில் மிகுந்த உண்மை இருக்கத்தான் வேண்டும்; ஏனெனில் இன்றைப் புலவரது கொள்கைக்கு நெடுந்தொலை அப்பாற்பட்ட காலத்தவரான திபெத் நாட்டு அறிஞர் தாரநாதர் திரிலிங்கம் என்ற தொடரை வழங்குவதோடல்லாமல் கலிங்கம் என்ற நாடு திரிலிங்கத்தின் ஒரு பகுதி என்றும், அதன் தலைநகர் கலிங்கபுரம் என்றும் குறித்துள்ளார். மேலும், இன்னும் பழமையான நாளிலேயே டாலிமி[1] இப் பெயரைக் கையாண்டுள்ளார். டாலிமியின் காலம் புராணங்களுக்கு முந்தியதாகல் வேண்டும்.

இனித் தெலுங்கு என்பது திரிலிங்கமன்று, திரிகலிங்கமென்பாரும் உளர். இதற்குப் பொருத்தமாகப் புராண மொன்றில் இவ் வழக்கிருப்பதாக டாக்டர் கெர்னும்[2] கல்


  1. Ptolemy
  2. Dr. Kern